டெல்லி: உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்த தனியார் தொலைகாட்சியின் விவாத நிகழ்ச்சியில் பாஜக செய்தி தொடர்பாளர் நூபர் சர்மா, நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்தன.
இதனிடையே டெல்லியை சேர்ந்த பாஜக நிர்வாகி நவீன் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் நூபர் சர்மாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகவும், நபிகள் நாயகத்து எதிராகவும் கருத்து தெரிவித்தார். இதற்கும் மிகுந்த எதிர்ப்பு கிளம்பியதால், இந்த பதிவை அவர் நீக்கிவிட்டார்.
இந்த நிலையில் ஈரான், கத்தார், குவைத், சவுதி அரேபியா ஆகிய வளைகுடா நாடுகள் இந்திய தூதரகத்திற்கு விளக்கம் சம்மன் அனுப்பி உள்ளன. குறிப்பாக கத்தார் வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் அனுப்பப்பட்ட சம்மனில், "நபிகள் நாயகத்திற்கு எதிரான கருத்து கடும் கண்டனத்திற்குரியது. இது வெறுப்பையும் வன்முறையையும் தூண்டும். இதுதொடர்பாக பொது மன்னிப்பையும் எதிர்பார்க்கிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா அனைத்து மதங்களுக்கும் உயர்ந்த மரியாதை அளிக்கும்
இந்த சம்மனுக்கு பதிலளித்த கத்தாருக்கான இந்திய தூதர் தீபக் மிட்டல், “இந்தியாவின் நாகரிகம், பாரம்பரியம், வேற்றுமையில் ஒற்றுமை என்ற வலுவான மரபுகளுக்கு ஏற்ப இந்திய அரசு அனைத்து மதங்களுக்கும் உயர்ந்த மரியாதை அளிக்கிறது.
தரக்குறைவான கருத்துக்களை தெரிவித்தவர்கள் மீது ஏற்கனவே கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் நூபர் சர்மா, நவீன் இருவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியதாக பாஜக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:"இயற்கை விவசாயத்தில் இந்தியா மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்" பிரதமர் மோடி