கொல்கத்தா : நடிகையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பியுமான மிமி சக்ரபோர்த்திக்கு சனிக்கிழமை (ஜூன் 26) திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இவர் கடந்த 4 தினங்களுக்கு முன்பு கோவிட் தடுப்பூசி எடுத்துக்கொண்டார். இந்நிலையில் இன்று அதிகாலை மிமிக்கு கடுமையான உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரது வீட்டில் மயங்கி விழுந்துள்ளார்.
இந்நிலையில் மிமியின் வீட்டுக்கு சென்று மருத்துவர் அவரை பரிசோதித்தார். அப்போது, “மிமிக்கு தடுப்பூசி எடுத்துக்கொண்டதால் பிரச்சினை ஏற்படவில்லை, அவருக்கு ஏற்கனவே சீறுநீரக பிரச்சினை இருந்தது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகைக்கு தடுப்பூசி
முன்னதாக மிமி சக்ரபோர்த்தி வியாழக்கிழமை வெளியிட்ட வீடியோவில், “கோவிட் தடுப்பூசி தொடர்பாக மக்கள் பீதியடைய வேண்டாம்” எனத் தெரிவித்திருந்தார். இவர் தடுப்பூசி போட்டுக்கொண்ட முகாம் போலியான தடுப்பூசி முகாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் போலி தடுப்பூசி முகாம் குறித்து விசாரணை நடத்திவருவதாக காவலர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதில், “இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர் ஒரு மெத்த படித்த குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரின் தந்தை கலால் அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
விசாரணை- வேண்டுகோள்
அவர் ஐஏஎஸ் அலுவலராக வேண்டும் என்று எண்ணத்தில் படித்துவந்துள்ளார். எனினும் அவரால் ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெறமுடியவில்லை. இச்சூழலில் இவர் எவ்வாறு தடுப்பூசி பெற்றார் என்பது குறித்தும் விசாரணை நடத்திவருகிறோம். தடுப்பூசிகள் உண்மையானதா அல்லது போலியானவையா என்பது குறித்தும் ஆய்வுகள் நடத்திவருகிறோம்” என்றார்.
இதைத் தொடர்ந்து “இந்தத் தடுப்பூசிகள் போலியானவை எனக் கண்டறியப்பட்டால், அந்த முகாமில் இருந்து தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டவர்கள் மீண்டும் தடுப்பூசி பெற வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க : கரோனா: இனி கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி