டெல் அவிவ்: இஸ்ரேல் போர் விமானங்கள் தீவிரவாதிகள் தங்கியிருந்தாக கூறப்படும் காசா மற்றும் சிரியாவிலுள்ள இரண்டு விமான நிலையங்கள், மசூதிகளில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதே நேரத்தில் இரண்டாம் முறையாக நிவாரணப் பொருட்கள் எகிப்து வழியாக காசாவை நேற்று (அக்.22) கடக்கத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கும் போது, 16வது நாளாகப் போர் நடைபெற்று வருகிறது. தரை வழி தாக்குதலும் நடைபெறுகிறது. 5 முறை காசாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் இது மிகவும் முக்கியமானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாலஸ்தீனிய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று (அக்.22) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ள அறிவிப்பின் படி 4651 பேர் இறந்து இருக்கலாம் எனவும், 14254 பேர் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது படி, அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலுக்குள் நுழைந்ததிலிருந்து மேற்குக் கரை பகுதியில் 93 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், 1650க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இஸ்ரேலைச் சேர்ந்த 1400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மனிதாபிமான அடிப்படையில் இந்தியா உதவி - பாலஸ்தீனத்துக்கு அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்கள்!
போரின் தற்போதைய நிலவரம்:
- காசாவிலுள்ள மருத்துவர்கள் கூறும் போது, எரிபொருள் பற்றாக்குறை காரணமாக மருத்துவமனையில் இன்குபேட்டர்களில் இருக்கும் குழந்தைகள் உயிர் இழக்கும் அபாயம் உள்ளது.
- அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலை ஆதரிப்பதோடு அவர்களுக்கு உறுதுணையாக உள்ளது.
- இரண்டாவது நிவாரணப்பொருட்கள் காசாவிற்கு எகிப்து வழியாக அனுப்பப்பட்டுள்ளது.
- இஸ்ரேல்-ஹமாஸ் போர் தீவிரமடைந்தால் அமெரிக்கப் படைகள் மற்றும் பணியாளர் பாதுகாப்பாக மீட்க அமெரிக்காத் தயாராக இருப்பதாக அமெரிக்காவின் வெளியுறவுச் செயலர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டின் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை (அக்.22) தெரிவிக்கும் போது, "பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா மனிதாபிமானத்தின் அடிப்படையில் உதவிகளை அனுப்புவதாகவும், 6.5 டன் மருத்துவ உதவி பொருட்கள் மற்றும் 32 டன் பேரிடர் நிவாரணப் பொருட்களைப் பாலஸ்தீன மக்களுக்காக இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஐஏஎப் 'சி-17' ரக போக்குவரத்து விமானம் மூலம் எகிப்திலுள்ள எல்-அரிஷ் விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நிவாரணப் பொருட்களில் அத்தியாவசிய உயிர் காக்கும் மருந்துகள், அறுவை சிகிச்சை சார்ந்த பொருட்கள், மாத்திரைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சானிட்டரி சார்ந்த பொருட்கள், தார்ப்பாய்கள், படுக்கைகள் மற்றும் கூடாரங்கள் ஆகியவை அடங்கும் எனவும் தெரிவித்துள்ளார். பாலஸ்தீன மக்களுக்கு ஐ.நா நிவாரணம் வழங்கி வருகிறது. ஐ.நா மூலமாகவும் இந்தியா, பாலஸ்தீன மக்களுக்குத் தேவையான நிவாரணம் மற்றும் ஆதரவளித்து வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்: ஆபரேஷன் அஜய் திட்டத்தில் மேலும் 143 இந்தியர்கள் மீட்பு!