மேற்குவங்கம்: மேற்குவங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் தேகங்கா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட வாசுதேவ்பூரைச் சேர்ந்தவர் முகமது நசிருல்லா மண்டல். 26 வயதான மண்டலுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இவர், பெற்றோர், மனைவி, குழந்தைகளுடன் வசித்து வரும் சாதாரண விவசாயத் தொழிலாளி.
இந்த நிலையில், மண்டலின் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது. வெறும் 17 ரூபாய் மட்டுமே இருந்த மண்டலின் வங்கிக் கணக்கில் நூறு கோடி ரூபாய் டெபாசிட் ஆகியுள்ளது. இது தொடர்பாக மண்டலுக்கு எதுவும் தெரியவில்லை.
இந்த சூழலில், ஜாங்கிபூர் காவல் மாவட்டத்தின் சைபர் கிரைம் போலீசார், இந்த மிகப்பெரிய பணப் பரிவர்த்தனை குறித்து, தேகங்கா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளவும் சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தினர். இதையடுத்து, தேகங்கா காவல் நிலைய போலீசார், முகமது நசிருல்லா மண்டலுக்கு இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பினர்.
இந்த பணப் பரிவர்த்தனை குறித்து தேகங்காவில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளைக்கு நேரில் சென்று விளக்கமளிக்க வேண்டும் என்றும், வரும் 30ஆம் தேதிக்குள் இது தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நோட்டீசில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நோட்டீசைப் பார்த்தும் மண்டலுக்கு நடப்பது என்னவென்று விளங்கவில்லை. பிறகு தனது நண்பர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டுள்ளார். மண்டலில் வங்கிக் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. நோட்டீசைத் தொடர்ந்து மண்டல் எஸ்பிஐ வங்கிக் கிளையில் ஆஜராகி விளக்கமளித்தார்.
இது தொடர்பாக ஈடிவி பாரத்திடம் பேசிய மண்டல், "நான் தினக்கூலித் தொழிலாளி. பிறர் நிலத்தில் வேலை செய்து பிழைப்பு நடத்துகிறேன். நோட்டீஸை பாரத்தும் முதலில் விஷயம் புரியவில்லை. பின்னர் நண்பர் ஒருவர் நோட்டீசைப் படித்து விஷயத்தை விவரித்தார். எனது வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதனால் பதற்றம் ஏற்பட்டது. என்ன செய்வது என்று தெரியவில்லை" என்று கூறினார். இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என மண்டலின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இதேபோல மகாராஷ்ட்ராவில் கடந்த 2021ஆம் ஆண்டு ஒரு சம்பவம் நடந்தது. ஏழை விவசாயி ஒருவரது வங்கிக் கணக்கில் சுமார் 15 லட்சம் ரூபாய் டெபாசிட் ஆனது. அந்தப் பணம் எப்படி வந்தது என்பதை அறியாத நிலையில், பிரதமர் மோடி தேர்தல் வாக்குறுதியின்படி தனது வங்கிக் கணக்கில் பணம் செலுத்தியிருப்பதாக நினைத்துக் கொண்டார். அதன் பிறகு, நீண்ட காலமாக வீடு கட்ட வேண்டும் என எண்ணிக் கொண்டிருந்த அவர், 9 லட்சம் ரூபாய் எடுத்து செலவு செய்தார். ஆறு மாதங்களுக்குப் பிறகு, அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பணம் கிராமத்தின் வளர்ச்சி நிதி என்றும், தவறுதலாக விவசாயி வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதாகவும் தெரியவந்தது.
இதையும் படிங்க: காரை 17 கி.மீ தள்ளிச் சென்ற திருடர்கள் - சுவாரசிய பின்னணி!