வங்கக் கடலில் உருவான குறைந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று(மே.24) அதிகாலையில் புயலாக மாறியது. யாஷ் என பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல், அடுத்த 12 மணி நேரத்தில் அதிதீவிரப் புயலாக மாறும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தப் புயல், வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒடிசாவின் பாரதீப் மற்றும் மேற்குவங்கத்தை ஒட்டிய சாகர் தீவுகள் இடையே நாளை(மே.26) கரையைக் கடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அப்போது, மணிக்கு 180 கி.மீ., முதல் 190 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் எனக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, ஒடிசா, மேற்கு வங்கம் மாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனை எதிர்கொள்வதற்குக் கடற்படை, விமானப் படை, தேசிய பேரிடர் மீட்புக் குழு களமிறக்கப்பட்டுள்ளது. ‘யாஷ்’ புயல் முன்னேற்பாடுகள் குறித்து ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்க மாநில முதலமைச்சர்களுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று (மே.24) ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.