அரபிக் கடலில் உருவாகி குஜராத்தை மையம் கொண்டுள்ள டவ்-தே புயல், அம்மாநிலத்தில் கடும் சேதத்தை விளைவித்துள்ளது. இதுவரை அம்மாநிலத்தில் உள்ள 16 ஆயிரத்திற்கும் மேலான வீடுகள், 40 ஆயிரத்திற்கும் மேலான மரங்கள், ஆயிரத்துக்கும் மேலான மின்கம்பங்கள் புயல் காரணமாக சேதமடைந்துள்ளன.
மேலும், புயல் பாதிப்பு காரணமாக குஜராத் மாநிலத்தில் மட்டும் இதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். புயலின் தீவிரத்தன்மை காரணமாக, குஜராத்தில் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணிகள் வரும் 20ஆம் தேதி (மே 20) வரை நிறுத்தி வைக்கப்படுவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் விநியோகம் தடைபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (மே 19) காலை வரை பொது மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் மாநில அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிலைமையைச் சமாளிக்க மாநிலப் பேரிடர் மீட்புக் குழு தயார் நிலையில் உள்ளதாக முதலமைச்சர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கேரள அமைச்சரவையில் ஷைலஜா டீச்சருக்கு இடம் மறுப்பு: பின்னணி என்ன?