ஹிந்தியில் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கிய 'கவுன் பனேகா க்ரோர்பதி' நிகழ்ச்சியை தெரியாதோர் யாரும் இருக்க முடியாது. வட இந்தியாவில் மிகவும் பிரபலமான இந்த நிகழ்ச்சியை, தென்னிந்தியாவிலும் பல முன்னணி நடிகர்களால் தொகுத்து வழங்கப்பட்டு ஒளிப்பரப்பானது.
வீட்டில் அமர்ந்துகொண்டு நிகழ்ச்சியைப் பார்க்கும் மக்களும், அவர்களுக்குள் நிகழ்ச்சியில் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளித்து விளையாடுவதும் உண்டு. ஒரேநாளில், கோடீஸ்வரன் ஆகலாம் என்றால், யாருக்குதான் ஆசை வராது. அந்த ஆசையில்தான், கர்நாடகாவைச் சேர்ந்த நபர் ஒருவர், 78 ஆயிரம் ரூபாயை இழந்துள்ளார்.
![போலி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/kn-mng-01-fraud-photo-7202146_11012021124935_1101f_00886_679_1101newsroom_1610357808_243.jpg)
மங்களூருவில் வசிக்கும் நபர் ஒருவருக்கு, +923059296144 என்ற பாகிஸ்தான் எண்ணிலிருந்து அழைப்புவந்துள்ளது. அதில் பேசியவர், "நாங்கள் கோடீஸ்வரன் நிகழ்ச்சியிலிருந்து பேசுகிறோம். சமீபத்தில் நடத்திய கேபிசி சிம் போட்டியில் உங்களின் மொபைல் எண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு, 25 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை காத்திருக்கிறது.
அதனை உங்களின் வங்கிக் கணக்கிற்கு அனுப்புவதற்கான வருமான வரிச் செலவை மட்டும் அனுப்ப வேண்டும்" என்று அன்பு வார்த்தைகளை அள்ளித் தெளித்துள்ளார்.
மேலும், கேபிசி நிகழ்ச்சி பெயரில் கடிதம் ஒன்றும், கேபிசி குழுவில் பணியாற்றும் ஒருவரின் அடையாள அட்டையையும் மெயிலில் அனுப்பியுள்ளனர். அவரின் எண்ணுக்குப் பணத்தை அனுப்புமாறு கூறியுள்ளனர்.
இதனைப் பார்த்து உண்மை என நம்பிய மங்களூருவாசி, கிட்டத்தட்ட 78 ஆயிரம் ரூபாய் மூன்று தவணைகளாக அனுப்பியுள்ளார். அதன்பின்னர், அவர்களைத் தொடர்புகொள்ள முடியாத நிலைமை வந்தததையடுத்து, சைபர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளார்.