மும்பை: மும்பை - கோவாவுக்கு இடைப்பட்ட கடல் பகுதியில் சொகுசுக் கப்பலில் நடந்த போதைப் பொருள் விருந்தில் கலந்துகொண்ட 20 பேர் கைதுசெய்யப்பட்டனர். அதில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருக் கான் மகனான ஆர்யன் கான், அர்பாஸ் மெர்சன்ட், மாடல் அழகி முன்முன் தமெச்சா ஆகியோரும் அடக்கம்.
இதையடுத்து, ஆர்யன் கான் உள்பட மூவரும் போதைப் பொருள் சிறப்பு நீதிமன்றத்தில் பிணை மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் அவர்களுக்குப் பிணை வழங்க மறுத்து, மனுவைத் தள்ளுபடி செய்தது.
மூவரும் விடுவிப்பு
இதனையடுத்து, மூவரின் தரப்பும் பிணை வழங்கக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டது. ஏறத்தாழ 22 நாள்களுக்குப் பின்னர் கடந்த வியாழக்கிழமை (அக். 28) மூவருக்கும் பிணை வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து, மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆர்யன் கான் நேற்று முன்தினம் (அக். 30) விடுதலை ஆனார்.
நீதிமன்ற நிபந்தனை
இந்நிலையில், அர்பாஸ் மெர்சன்ட், முன்முன் தமெச்சா ஆகிய இருவரும் நேற்று (அக். 31) சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். முன்முன் தமெச்சா மகளிர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அவரது சொந்த மாநிலமான மத்தியப் பிரதேசத்திற்குச் செல்ல, போதைப் பொருள் தடுப்பு பிரிவினரிடம் (என்சிபி) அனுமதி கோரி மனு அளிக்க இருப்பதாக அவரின் வழக்கறிஞர் தெரிவித்தார்.
முன்னதாக, மூவரும் என்சிபி நீதிமன்றத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் காலை 11 மணி முதல் மதியம் 2 மணிக்குள் ஆஜராக வேண்டும் என உயர் நீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கூண்டுக்கிளியான ஆர்யன் கான்.. இத்தனை நிபந்தனைகளா?