சத்ரா (ஜார்கண்ட்): ஜார்கண்ட் மாநிலத்தின் சத்ராவில் செவ்வாயன்று தன்னைத்தானே சுட்டுக்கொள்வதற்கு முன்னர் சி.ஆர்.பி.எஃப். வீரர் ஒருவர் சக வீரரை கொன்றுள்ளார்.
சத்ரா மாவட்ட தலைமையகத்திலிருந்து 17 கி.மீ தூரத்தில் சிமரியா காவல் நிலைய பகுதியில் உள்ள ஐ.டி.ஐ. கல்லூரியில் அமைந்துள்ள கோவிட் தனிமைப்படுத்தப்பட்ட கட்டடத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
இறந்த சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் ராஜஸ்தானைச் சேர்ந்த கலு ராம் குர்ஜார் (35), ஹரியானாவைச் சேர்ந்த ரவீந்திர குமார் (40) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கலு ராம் குர்ஜார் தற்கொலை செய்துகொண்டதாகத் தோன்றுகிறது, அவரை தற்கொலை செய்யவிடாமல் தடுத்தபோது, ரவீந்திர குமாரை சுட்டுக் கொன்றார், பின்னர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார் எனக் கூறப்படுகிறது.
"சம்பவம் நடந்த நேரத்தில் இருவரும் அறையில் தனியாக இருந்தனர்" என்று சத்ராவின் காவல் கண்காணிப்பாளர் ரிசாப் ஜா ஈடிவி பாரத்திடம் தெரிவித்தார். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருவதாகவும், இருவரின் உடல்களும் உடற்கூராய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஜா கூறினார்.
காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட மூத்த அலுவலர்கள், சி.ஆர்.பி.எஃப். 190 பட்டாலியனின் கமாண்டன்ட் பவன் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
ஆரம்பத்தில், இருவரும் ஒருவருக்கொருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடந்துவருவதாக காவல் கண்காணிப்பாளர் தெரிவிக்கிறார்.