விஜயவாடா : ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ராஷ்ட்ரீய இஸ்பாத் நிகாம் லிமிடெட் (RINL) இரும்பு ஆலை செயல்பட்டுவருகிறது. இதனை விசாகப்பட்டினம் இரும்பு ஆலை என்று அழைப்பார்கள்.
இந்த ஆலையை தனியாருக்கு தாரை வார்க்கும் நடவடிக்கையில் ஒன்றிய அரசு இறங்கியுள்ளது. இதற்கு தொழிலாளர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில், ஒன்றிய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் கே. நாராயணா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “விசாகப்பட்டினம் இரும்பு ஆலையை தனியாருக்கு தாரைவார்க்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒன்றிய அரசாங்கம் பெருநிறுவனங்களிடம் (கார்ப்பரேட்) சரண் அடைந்துவிட்டது” என்றார். தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி குறித்து கூறுகையில், “அவருடைய கருத்துக்கும் மக்களின் தேவைக்கும் இடையே வித்தியாசம் உள்ளது. ஆகஸ்ட் 14ஆம் தேதியை பிரிவினைவாத துக்க தினமாக அனுசரித்தது அரசியல் லாப நோக்கில் செய்யப்பட்ட நடவடிக்கை” என்றார்.
மேலும், “ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதல் நடத்திவரும் நிலையில், பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள்ளும் நுழையக் கூடும். எனவே இந்தியா கவனத்துடன் இருக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க : விசாகப்பட்டினம் எஃகு ஆலையைத் தனியார் மயமாக்குவதை ஏற்றுக்கொள்ளுமா தெலுங்கு பூமி?