டெல்லி : மணிப்பூர் விவகாரத்தில் முதலமைச்சர் பைரன் சிங்கை மத்திய அரசும், பிரதமர் மோடியும் பாதுகாத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பினாய் விஸ்வாம் குற்றம் சாட்டி உள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் முதல் கலவரம் வெடித்து வருகிறது. பொருளாதாரத்தில் முன்னேறிய மெய்தி இன மக்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்கக் கூடாது என வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அதில் இருந்து கடந்த மூன்று மாதங்களாக மணிப்பூர் மாநிலத்தில் கலவரச் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.
இந்த கலவரச் சம்பவங்களில் சிக்கி இதுவரை 160க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்து இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து பாதுகாப்பு தேடி முகாம்களில் வசித்து வருகின்றனர். ஏறத்தாழ 3 மாதங்களாக நீடித்து வரும் கலவரத்தை கட்டுப்படுத்த மாநில அரசு போராடி வருகிறது.
இதனிடையே கடந்த வாரம் குக்கி இனத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக சாலையில் அடித்து இழுத்துச் செல்லப்பட்ட சம்பவத்தின் வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல் மறைந்த சுதந்திர போராட்ட வீரரின் மனைவி உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
மாநிலத்தில் இணையதளம் முடக்கப்பட்டு உள்ள நிலையில் பல்வேறு கொடூரச் சம்பவங்கள் வெளி வராமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடயே மணிப்பூர் கலவரத்தில் அம்மாநில முதலமைச்சரை மத்திய அரசும், பிரதமர் மோடியும் பாதுகாப்பதாக கேரளாவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் பினாய் விஸ்வம் குற்றஞ்சாட்டி உள்ளார்.
இது குறித்து பேசிய அவர், நாடாளுமன்றத்தின் முந்தைய கூட்டத் தொடரில், மத்திய அரசு தொழிலதிபர் கவுதம் அதானியை பாதுகாக்க முயற்சித்தது, இந்த கூட்டத் தொடரில், அதே அரசு மணிப்பூர் முதலமைச்சர் பைரேன் சிங் அரசை பாதுகாக்க முயற்சிக்கிறது என்றார். மணிப்பூர் முதலமைச்சர் பைரன் சிங் பதவி விலக வேண்டும் என்று கூறிய எம்.பி. பினாய் விஸ்வம், ஆட்சியில் தொடரும் தார்மீக உரிமையை அரசு இழந்துவிட்டதாக தெரிவித்தார்.
மாநிலங்களவையில் 267 விதியின் கீழ் மணிப்பூர் வன்முறை குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்றும் ஆனால், அதை நடத்தும் மனநிலையில் மத்திய அரசு இல்லை என்றார். மணிப்பூர் கலவரம் வெடித்து 78வது நாளில் மாநிலம் குறித்து சில நொடிகள் மட்டும் பிரதமர் மோடி பேசியதாகவும் அதுவும் பெண்களுக்கு எதிராக நடந்த வன்கொடுமைகள் குறித்த தகவல்கள் வெளி உலகிற்கு தெரியவந்த பிறகு தான் பேசியதாகவும் கூறினார்.
அதிலும் மணிப்பூர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டிற்குப் பிறகுதான் பிரதமர் மோடி வாய் திறந்து பேசியதாக அவர் தெரிவித்தார். கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் அண்மையில் மணிப்பூர் சென்றதாகவும், மாநிலத்தில் தற்போதைய நிலையை நேரில் பார்த்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அங்குள்ள மக்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்வதாகவும் ஆயிரக்கணக்கானோர் அகதிகள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார். மேலும் பொது மக்களுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுக்கபடவில்லை என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க : பெண்ணின் வயிற்றில் கத்திரிகோல்கள் வைத்து தைத்த கொடூரம்.. 7 ஆண்டுகளுக்கு பின் விசாரணை அறிக்கை தாக்கல்!