டெல்லி: நாட்டில் கரோனா 3ஆவது அலை தீவிரமாக பரவி வரும் சூழ்நிலையில் தற்போது கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசி இந்திய மருத்துவ கட்டுப்பாட்டிலிருந்து பொது சந்தைக்கு வர உள்ளது. அதிகாரப்பூர்வ ஆதாரங்களின்படி, ஒரு டோஸுக்கு ரூ. 275 மற்றும் கூடுதல் சேவைக் கட்டணமாக ரூ.150 என நிர்ணயிக்கப்படும் எனத் தெரியவந்துள்ளது.
தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) தடுப்பூசிகளை மலிவு விலையில் வழங்குவதற்கான விலையை நிர்ணயிக்கும் பணியைத் தொடங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, கோவாக்சின் ஒரு டோஸ் விலை ரூ.1,200 ஆகவும், தனியார் மருந்தகங்களில் கோவிஷீல்டு விலை ரூ.780 ஆகவும் உள்ளது. விலையில் ரூ.150 சேவைக் கட்டணமும் அடங்கும். இரண்டு தடுப்பூசிகளும் நாட்டில் அவசரகால பயன்பாட்டிற்கு மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
160 கோடிக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது
2021 ஆம் ஆண்டில் கோவிட் தடுப்பூசி இயக்கம் தொடங்கியதில் இருந்து நாடு முழுவதும் போடப்பட்ட ஒட்டுமொத்த கோவிட்-19 தடுப்பூசி அளவுகள் கடந்த செவ்வாயன்று 163.49 கோடியைத் தாண்டியுள்ளது. இதன் மூலம் கரோனாவிற்கு எதிரான பயணத்தில் இந்தியா நீண்ட தூரம் வந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய மருந்துகள் தரநிலைக் கட்டுப்பாட்டு அமைப்பின் கோவிட்-19 தொடர்பான நிபுணர் குழு ஜன.19 ஆம் தேதி கோவிட் தடுப்பூசிகளான கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சினை சில நிபந்தனைகளுக்கு உள்பட்டு பயன்படுத்துவதற்கு வழக்கமான சந்தை அனுமதியை வழங்க பரிந்துரைத்து இருந்தது.
சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் இயக்குனர் (அரசு மற்றும் ஒழுங்குமுறை விவகாரங்கள்) பிரகாஷ் குமார் சிங், கோவிஷீல்டு தடுப்பூசிக்கு வழக்கமான சந்தை அனுமதி கோரி அக்.25 அன்று இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரலுக்கு விண்ணப்பம் அளித்திருந்தார்.
அவசரக்கால பயன்பாட்டு அங்கீகாரம்
பாரத் பயோடெக் நிறுவனத்தின் முழு நேர இயக்குநரான வி. கிருஷ்ண மோகன், சில வாரங்களுக்கு முன்பு, கோவாக்சினுக்கான வழக்கமான சந்தை அங்கீகாரத்தைப் பெற்றார்.
அப்போது மருத்துவத் தரவுகளுடன் வேதியியல், உற்பத்தி மற்றும் கட்டுப்பாடுகள் பற்றிய முழுமையான தகவலைச் சமர்ப்பித்தார். கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டுக்கு கடந்த ஆண்டு ஜன.3 ஆம் தேதி அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் (EUA) வழங்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க:2ஆவது தவணை; கோவிஷீல்டுக்குப் பதிலாக கோவாக்சின்...!