டெல்லி: கரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் இந்தியா முழுவதும் படிப்படியாக குறைந்து வருகிறது. இருப்பினும், அக்டோபர் இறுதியில் கரோனா மூன்றாம் அலை ஏற்படலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில், தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன், "அடுத்தாண்டு இறுதிக்குள் இந்தியாவில் 70 விழுக்காட்டினருக்கு தடுப்பூசி செலுத்தப்படலாம். அப்போது, நாடு இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்புள்ளது.
கடந்த சில மாதங்களாகவே தொற்று பாதிப்பு அதிகமாக இல்லாததால், நாம் மெதுவாக தொற்றுபரவும் கட்டத்திற்குள் நுழைந்துவிட்டோம். முதல், இரண்டாவது அலையில் பாதிக்கப்படாத பகுதிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த மண்டலங்கள், மக்கள் அடர்த்தி அதிகம் உள்ள இடங்களில் அடுத்த சில மாதங்களில் தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இந்தியாவில், அடுத்த அலையில் குழந்தைகள் அதிக எண்ணிக்கையில், தொற்று பாதிப்புக்கு உள்ளாகலாம். இருப்பினும், நல்வாய்ப்பாக குழந்தைகளுக்கு உடல்நலக்கோளாறுகள் மிதமான அளவிலே ஏற்படுகிறது. கரோனாவால் உயிரிழந்த சிறுவர்களின் எண்ணிக்கையும் மிக மிக குறைவாகவே உள்ளது. ஆனால், நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனைகளைத் தயாராக வைத்திருக்கவேண்டும்" எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பள்ளிகள் திறக்க முன்னுரிமை அளிக்க வேண்டும் - மூத்த விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன்