கவுகாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் கரோனா தொற்றுப் பரவல் மிக அதிகளவில் உள்ளது. மாநிலத்தில் கடந்த ஆறு நாள்களில் மட்டும் மூன்றாயிரம் பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் சுமார் 1500 பேர் கவுகாத்தியைச் சேர்ந்தவர்கள் எனவும் அரசு தெரிவித்துள்ளது. மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 360 பேர் கவுகாத்தியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து அரசு, தனியார் மருத்துவமனைகளில் தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காகக் கூடுதல் படுக்கை வசதிகள் செய்யப்பட்டுவருகின்றன.
தொடர்ந்து தொற்றால் பாதிக்கப்படுபவரின் எண்ணிக்கை அதிகரிப்பதால் கவுகாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் சேர்ப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. தற்போது இந்த மருத்துவமனையில் 150 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
தொற்றால் பாதிக்கப்பட்ட 600-க்கும் மேற்பட்டோர் மாநிலத்தில் உள்ள ஆயுர்வேதா மருத்துமனை உள்ளிட்ட பிற மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்ட படுக்கைகள் அனைத்தும் பெரும்பாலும் நிரப்பப்பட்டுவிட்டதாக மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது. இதன் காரணமாக கூடுதல் படுக்கைகளை ஏற்பாடு செய்யும் பணியும் மும்முரமாக நடைபெற்றுவருகிறது.
லேசான அறிகுறிகளைக் கொண்ட பல கரோனா நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் மருத்துவமனைகளில் அதிகப்படியான மக்கள் கூடுவது தடுக்கப்படுகிறது. தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் பலரும் டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, மேற்கு வங்கத்திலிருந்து அஸ்ஸாம் மாநிலத்திற்கு வந்திருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.