உலக நாடுகளை மிரட்டும் கரோனா வைரசைக் கட்டுப்படுத்த முடியாமல் பல முன்னணி நாடுகள் திணறுகின்றன. வைரஸ் தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் தீவிரமாகக் களமிறங்கியுள்ளனர். நூற்றுக்கணக்கான மருந்துகள் பரிசோதனை கட்டத்தில் உள்ளன. உலகிலேயே கரோனா நோய்த்தொற்றால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடாக அமெரிக்கா உள்ளது. அதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.
கடந்த சில நாள்களாகவே இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்துவருகிறது. தினமும் புதிதாகத் தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்துவருகிறது. இந்தியாவில் கரோனா வைரசால் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22 ஆயிரத்து 65 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 99 லட்சத்து ஆறாயிரத்து 165 ஆக உள்ளது. கரோனாவல் இதுவரை ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 709 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை கரோனாவால் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 94 லட்சத்து 22 ஆயிரத்து 636 ஆக அதிகரித்துள்ளது. நேற்று (டிசம்பர் 14) மட்டும் 34 ஆயிரத்து 477 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக 15 கோடியே 55 லட்சம் 60 ஆயிரத்து 655 நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
நேற்று (டிசம்பர் 13) மட்டும் ஒன்பது லட்சத்து 93 ஆயிரத்து 665 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. தற்போது கரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் விகிதம் 95.12 விழுக்காடாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.45 ஆகவும் உள்ளது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். உடலில் எதிர்ப்புச் சக்தி உருவாகும் வரை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.