மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் (சி.எஸ்.எம்.டி) ரயில்வே காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீஸ் கான்ஸ்டபிள் ரூபாலி பாபாஜி அகாதே. கர்ப்பிணியான இவர், ஒரு நாளைக்கு 12 மணி நேரம் அயராது வேலை செய்து வருகிறார்.
எந்தப் பெண்ணும் கர்ப்பக் காலத்தில், ஓய்வு எடுக்கவே விரும்புவாள். ஆனால் இவரோ காலை 9 மணிக்கு பணிக்கு வந்து இரவு 9 மணிக்கு தான் வீடு திரும்புகிறார். கரோனா தொற்று, அதனால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு என அவசரகாலங்களில் காவல் துறைக்கு வேலைப் பளு அதிகமாகிறது. இந்த நெருக்கடியான சூழல் தாம் ரூபாலியை பணிக்கு அழைத்து வருகிறது.
ரயில்வே வளாகத்தில் கரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்பதை இவர் கண்காணிக்கிறார். கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளாக ரயில்வே போலீஸில் ரூபாலி பணியாற்றி வருகிறார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்ட இவர், தற்போது தனது மாமியாருடன் வசிக்கிறார்.
ரூபாலியின் கோரிக்கையெல்லாம் ஒன்றே ஒன்றுதான், அது மக்கள் கரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதே.
"மாநிலம் முழுவதிலும் உள்ள மக்கள் பயப்படாமல் காவல் துறைக்கு ஒத்துழைக்க வேண்டும். அவசர தேவைகளுக்கு உள்ளூர் ரயில்களைப் பயன்படுத்துபவர்கள் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். முகக்கவசம் அணிந்து கொள்ளுதல், சானிடைசர் பயன்படுத்துவதை பின்பற்ற வேண்டும்" என்கிறார் போலீஸ் கான்ஸ்டபிள் ரூபாலி.
இக்கட்டான சூழலில், கடமையை ஆற்றும் கான்ஸ்டபிள் ரூபாலி, பாராட்டுக்குரியவர்.