டெல்லி : தலைநகர் டெல்லியில் 10 வயது சிறுமியை வீட்டு வேலைக்கு பணி அமர்த்தி கடுமையாக தாக்கி கொடுமைப்படுத்தியதாக கூறி தனியார் விமான நிறுவனத்தின் விமானி மற்றும் அவரது கணவர் என இரண்டு பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லி துவாரகா பகுதியை சேர்ந்தவர் கவுசிக் பாக்சி. அவரது மனைவி பூர்னிமா பாக்சி. கவுசிக் பாக்சி தனியார் விமான நிறுவனத்தின் தரைதள பணியாளராக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி பூர்னிமா பாக்சி இண்டிகோ விமான நிறுவனத்தில் விமானியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் இவர்களது வீட்டில் பணியாற்ற 10 வயது சிறுமியை பணிக்கு அமர்த்தியதாக கூறப்படுகிறது. கடந்த 2 மாதங்களாக சிறுமி வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த சிறுமியை தம்பதி அடித்து துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. அந்த சிறுமியின் உடலில் தீயால் சுட்டு காயங்கள் ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அந்த சிறுமியின் உடலில் தீயால் சுட்ட காயங்கள் உள்பட பல காயங்கள் காணப்படுகின்றன. இதனை சிறுமியின் உறவினர் ஒருவர் கவனித்து உள்ளார். அந்த தம்பதியின் வீட்டுக்கு திரண்டு சென்ற சிறுமியின் உறவினர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பி உள்ளனர். இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் கும்பல் தம்பதி இருவரையும் அடித்து, நொறுக்கினர்.
பெண் விமானியை மற்ற பெண்கள் அடிப்பதும், அதை தடுக்க வந்த கணவரையும் மற்றவர்கள் தாக்குவது போன்ற வீடியோ வெளியானது. இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விசாரணை நடத்தினர். இதுகுறித்து பேசிய போலீசார் தம்பதி 10 வயது சிறுமியை வீட்டு வேலைக்கு அமர்த்தி இருந்தது தெரிய வந்ததாக கூறினர்.
சிறுமியின் உடலில் ஆங்காங்கே சிறிய காயங்கள் மற்றும் தீயால் சுட்ட தடயங்கள் தென்பட்டதாக போலீசார் கூறினர். சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தி இருப்பதாகவும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனார்.
கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். அதேநேரம் சிறுமிக்கு கவுன்சிலிங் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளதாக போலீசார் கூறினர். இதனிடையே இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதகா பெண் விமானி பணியாற்றி வரும் இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்து உள்ளது.
வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், வீடியோ ஆதரங்களை கொண்டு விசாரணை நடத்தி வருவதாகவும் உண்மைத் தன்மை அறிந்து அதற்கேற்ற வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இண்டிகோ நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : "இந்தியா" பெயர் விவகாரம்.. 26 எதிர்க்கட்சிகள் மீது புகார்! எதுக்கு தெரியுமா?