ஜெய்ப்பூர்: கரோனா வைரஸ் பரவலை தடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. ஆனால், மகாராஷ்டிரா, கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களில் கரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இதனையடுத்து அம்மாநில அரசுகள் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர், ஜோத்பூர், கோடா, அஜ்மீர், அல்வர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் பிப்ரவரி 22ஆம் தேதி முதல் மார்ச் 21ஆம் தேதிவரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பொது இடங்களில் நான்கு பேருக்கு மேல் கூட்டமாக கூடக்கூடாது. முகக் கவசம், தகுந்த இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
அதே சமயம், தேர்தல் பரப்புரை, விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையம், மருத்துவ நிறுவனங்கள், வங்கிகள், தபால் அலுவலகங்கள், மாநில மற்றும் பொது அலுவலகங்கள், அரசு சாரா அலுவலகங்கள், தொழில்துறை மற்றும் வணிக நிறுவனங்கள், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை செயல்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், ஆகியவற்றிற்கு 144 தடை உத்தரவிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருமணம் உள்ளிடட் நிகழ்ச்சிகளில் 200 பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் துக்க நிகழ்ச்சிகளில் 20 பேர் கலந்துகொள்ள மட்டுமே அனுமதி அளித்து ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளார்.