பாலசோர்: கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா அருகே நேற்று (ஜுன் 2) பயங்கர விபத்துக்குள்ளானது. மேற்கு வங்கத்தில் இருந்து புறப்பட்ட யஷ்வந்த்பூர் - ஹவுரா விரைவு ரயில் பாஹனாக நகர் அருகே வந்து கொண்டிருந்த போது விபத்துக்குள்ளாகி தடம் புரண்டது.
இந்த நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி வந்து கொண்டு இருந்த கோரமண்டல் விரைவு ரயில் ஏற்கனவே தடம் புரண்டு கிடந்த யஷ்வந்த்பூர் - ஹவுரா ரயிலின் பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. மேலும், சரக்கு ரயிலிலும் என மொத்தம் 3 ரயில்கள் விபத்துக்குள்ளாகி உள்ளது.
இந்த பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே இரு ரயில்கள் மோதிய விபத்தில் பலர் இறந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியானதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே ஊழியர்கள் மற்றும் மீட்பு படையினர் தொடர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மீட்பு படையினருடன் உள்ளூர் மக்களும் சேர்ந்து விபத்தில் சிக்கிக் கொண்டவர்களை மீட்டு வருகின்றனர்.
மேலும், இந்த விபத்து குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒடிசாவில் ரயில் விபத்துக்குள்ளான செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்ததாகவும் மற்றும் உடனடியாக ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் தொடர்பு கொண்டு விபத்து குறித்து கேட்டறிந்ததாகவும் தெரிவித்தார். மேலும் மீட்பு நடவடிக்கை விரைந்து மேற்கொள்ளப்படும் எனவும், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்ககலையும் தெரிவித்தார்.
இதனிடையே ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாயும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், சிறு காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் இழப்பீடாக வழங்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி தனது இரங்கலைத் தெரிவித்து, ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து வேதனை அளிப்பதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக பிரதமர் மோடி, ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவிடம் பேசி விபத்தின் நிலைமை குறித்து கேட்டறிந்ததாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருவதாகவும் உறுதியளித்தார்.
அதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மத்திய அரசு சார்பில் ரூ.2 லட்சமும், படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
பின்னர், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை பத்திரமாக மீட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதே தங்களது முதன்மை குறிக்கோள் என்றும் தெரிவித்தார். பின்னர் விபத்து நடந்த இடத்திற்கு இன்று நேரில் செல்ல உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில், தற்போது வரை இந்த ரயில் விபத்தில் 261 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 900 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தென்கிழக்கு ரயில்வே தரப்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Coromandel Express : சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து! 100 பேர் பலி?.. 180 பேர் படுகாயம்!