புதுச்சேரி: விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி நேற்று மாலை கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி கன்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. விழுப்புரம் நெடுஞ்சாலை ரெட்டியார்பாளையம் அருகே சென்று கொண்டிருந்த பொழுது திடீரென கன்டெய்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி தாண்டி எதிரே வந்த காரின் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காருக்குள் பயணம் செய்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை அதிகாரி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கிய இருவரையும் மீட்டு விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் லாரி டிரைவர் தூக்க கலக்கத்தில் லாரியை ஓட்டி வந்தது, விபத்திற்கான காரணம் எனத்தெரியவந்தது. அந்த லாரியை விழுப்புரத்தைச் சேர்ந்த குமாரசாமி மற்றும் ஓட்டுநர் முத்து ஓட்டி வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து உடலை கைப்பற்றிய காவல் துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து காரணமாக புதுச்சேரி விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருமண நிகழ்வில் கலந்துகொள்ள புதுச்சேரி வந்தவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திருப்பூரில் தாய், மகன்கள் கொலை: வழக்கில் தேடப்பட்டவர் கிணற்றில் சடலமாக மீட்பு