தமிழ்நாடு, கேரளா, அஸ்ஸாம் உள்பட ஐந்து மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் வரும் மே மாதம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அஸ்ஸாமில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடியரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றமாட்டோம் என ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.
சிவசாகரில் தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்ட அவர், "அஸ்ஸாம் தேயிலை தோட்ட பணியாளர்கள், ஒரு நாளைக்கு 167 ரூபாய் கூலி பெறுகிறார்கள். ஆனால், குஜராத் வணிகர்கள் அந்த தேயிலை தோட்டத்தையே சொந்தமாக வைத்துள்ளனர்.
எனவே, அஸ்ஸாம் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ஒரு நாள் கூலியாக 365 ரூபாய் வழங்க வாக்குறுதி அளிக்கிறேன். பணம் எங்கிருந்து வரும். குஜராத் வணிகர்களிடமிருந்து வரும். உலகத்தில் எவருக்கும் அஸ்ஸாமை உடைக்கும் அளவுக்கு சக்தி இல்லை.
அப்படி, எவரேனும் அஸ்ஸாம் அமைதி ஒப்பந்தத்தை தொட முயற்சித்தாலோ வெறுப்பை பரப்ப முயன்றாலோ அவர்களுக்கு காங்கிரஸ் கட்சியும் அஸ்ஸாம் மக்களும் தக்க பாடத்தை கற்றுக்கொடுப்பார்கள்" என்றார்.
அஸ்ஸாம் முதலமைச்சர் சர்பானந்த சோனோவாலை விமர்சித்த ராகுல் காந்தி, "ரிமோட் மூலம் தொலைக்காட்சியை இயக்கலாம். ஆனால், அஸ்ஸாம் போன்ற மாநிலத்தை இயக்க முடியாது. முதலமைச்சர் என்பவர் மக்களுக்காக இருக்க வேண்டும், உழைக்க வேண்டும். ஆனால், தற்போதுள்ள முதலமைச்சர் நாக்பூர், டெல்லி, குஜராத் ஆகிய இடங்களிலிருந்து உத்தரவுகளை பெற்று கொள்கிறார். அவை, அஸ்ஸாம் மக்களின் நலனுக்காக அல்ல" என்றார்.