டெல்லி: மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் இந்திய மதசார்பற்ற முன்னணி கட்சியுடன் இணைந்து கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 92 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அஸ்ஸாம், மேற்கு வங்க சட்டப்பேரவையின் முதல்கட்ட தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்புகள் உள்ளன. மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் மொத்தம் 92 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இடதுசாரிகள் பெரும்பாலான இடங்களில் போட்டியிடுகின்றன. அஸ்ஸாம் மாநிலத்தை பொருத்தவரை காங்கிரஸுடன் பத்ருதீன் அஸ்மல் கட்சி, இடதுசாரிகள் மற்றும் போடோலாந்து மக்கள் முன்னணி கட்சியினர் இணைந்து மெகா கூட்டணி அமைத்துள்ளனர்.
294 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கத்துக்கு முதல்கட்டமாக தேர்தல் மார்ச் 27ஆம் தேதி நடக்கிறது. நிறைவாக ஏப்ரல் 29ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மறுபுறம் அஸ்ஸாம் மாநிலத்துக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
அதில் முதல்கட்டமாக 12 மாவட்டங்களின் 47 சட்டப்பேரவை தொகுதிக்கு நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 1ஆம் தேதியும், மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதியும் நடைபெறுகிறது. வாக்குகள் மே 2ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
இதையும் படிங்க: கேரள தங்கக் கடத்தல்; மார்ச் 12 ஆஜராக சபாநாயகருக்கு உத்தரவு!