டெல்லி: பிகார் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸின் மோசமான செயல்பாடுகளை அதன் கூட்டணி கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் விமர்சித்துவருகிறது. சில காங்கிரஸ் தலைவர்களும் பிகாரில் காங்கிரஸின் மோசமான செயல்பாடுகள் குறித்து பேசிவருகின்றனர்.
இதற்கிடையில், பிகாரில் காங்கிரஸின் மோசமான செயல்பாடுகளை ஒப்புக்கொள்ள வேண்டும், காங்கிரஸ் மீண்டெழும் பொருட்டு சீர்திருத்த நடவடிக்கைகள் தேவை என அக்கட்சியின் மூத்தத் தலைவர் கபில் சிபல் கூறியுள்ளார்.
இக்கருத்து அக்கட்சி மூத்தத் தலைவர்களிடம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. கபில் சிபலின் கருத்துக்கு ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது நாடெங்கிலும் உள்ள காங்கிரஸ் தொண்டர்களை அவமதிக்கும் வகையில் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக்கு குழு கூட்டம் இன்று (நவ.17) மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி காணொலி வாயிலாக கலந்துகொள்கிறார்.
முன்னதாக காங்கிரஸ் கட்சி தனது செயல்பாடுகளை சீர்தூக்கி பார்க்க வேண்டும் என்றும் கட்சிக்கு நிரந்த தலைவர் நியமிக்கப்பட வேண்டும் என்றும் ஆகஸ்ட் மாதம் கபில் சிபல் உள்பட 23 மூத்தத் தலைவர்கள் கடிதம் எழுதினார்கள்.
இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இந்நிலையில், மூத்தத் தலைவர் அஹமது பட்டேல், கே.சி. வேணுகோபால், ஏ.கே. அந்தோணி, அம்பிகா சோனி, முகுல் வாஸ்னிக், ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட காங்கிரஸ் சிறப்பு குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் கூட்டம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 'தமிழ்நாட்டில் திமுக, காங்கிரஸ் கூட்டணி வெல்லும்'- தினேஷ் குண்டுராவ்