புதுச்சேரியில் நிலவிவரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ராகுல்காந்தி இன்று ஒருநாள் அம்மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். இன்று காலை 11.40 மணிக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தில் டெல்லியிலிருந்து கிளம்பி 12 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் விமான நிலையம் கேட் எண் 6 வழியாக உள்ளே சென்று தனி விமானத்தில் புதுச்சேரி செல்கிறார். ராகுல்காந்தி விமானநிலையம் வருகையையொட்டி சிறப்பு பாதுகாப்பு படை அலுவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி செல்லும் ராகுல்காந்தி முத்தியால்பேட்டை பகுதியில் பகல் 1.30 மணி அளவில் சோலைநகர் பகுதியில் அரசியல் கலப்பு அல்லாமல் மீனவ சமுதாய மக்களை சந்திக்கிறார். அதன்பின் பாரதிதாசன் கல்லூரி மாணவிகளைச் சந்தித்து கலந்துரையாடுகிறார். அதைத்தொடர்ந்து, பிற்பகல் 3 மணி அளவில் ரோடியர் மில் திடலில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார்.
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் நான்கு எம்எல்ஏ-க்கள் விலகி பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் புதுச்சேரி வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.