சண்டிகர்: ஹரியானா மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவரான குல்தீப் பிஷ்னோய் இன்று(ஆகஸ்ட் 4) பாஜகவில் இணைந்தார். முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் உள்ளிட்ட பாஜகவின் முக்கிய தலைவர்கள் முன்னிலையில், தனது மனைவி ரேணுகா பிஷ்னோயுடன் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். முன்னாள் முதலமைச்சர் பஜன் லாலின் மகனான இவர், நான்கு முறை எம்எல்ஏவாகவும், இரண்டு முறை எம்பியாகவும் இருந்தவர். அண்மையில் நடந்த மாநிலங்களவை தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்தற்காக கடந்த ஜூன் மாதம் காங்கிரசிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து நேற்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த இவர் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிஷ்னோய், பிரதமர் மோடியை "சிறந்த பிரதமர்" என்று பாராட்டினார். நாட்டின் நலனைப் பற்றி எப்போதும் சிந்திக்கும் அவரை "இந்தியாவின் சிறந்த பிரதமர்" என்று கூறுவதில் தவறில்லை என்றும் தெரிவித்தார்.
கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை, ஜோதிராதித்ய சிந்தியா, சுனில் ஜாகர், சவுத்ரி பிரேந்திர சிங், ரீட்டா பகுகுணா ஜோஷி, விஜய் பகுகுணா, ஜதின் பிரசாத், ஆர்.பி.என்.சிங் போன்ற பல முக்கிய தலைவர்கள் காங்கிரசிலிருந்து விலகி, பாஜகவில் இணைந்துள்ளனர். இதுமட்டுமல்லாமல் ஏராளமான எம்பிக்கள், எம்எல்ஏக்களும் காங்கிரசிலிருந்து விலகி பாஜக மற்றும் பிற அரசியல் கட்சிகளில் இணைந்துள்ளனர்.
இதையும் படிங்க:சஞ்சய் ராவத்திற்கு ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு!