கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கடந்தாண்டு சர்வதே கச்சா எண்ணெயின் விலை குறைந்தது. இருப்பினும், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு உயர்த்தியது. இதனைத் தொடர்ந்து, நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே சென்றது.
தொடர்ந்து, 12 நாளாக உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் உச்சத்தை தொட்டது. நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பையில் பெட்ரோல் லிட்டருக்கு 97 ரூபாய்க்கும், டீசல் 88 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. இதனால், ஏழை மற்றும் நடுத்தரவர்க்க மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
இந்நிலையில், மக்களை துன்பப்படுத்தி மத்திய அரசு லாபத்தை தேடுவதாக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், "வரலாறு காணாத அளவில் எரிவாயு விலை உயர்ந்துள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதகளில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது. டீசல் விலை உயர்வால் லட்சக்கணக்கான விவசாயிகளின் துயரம் மேலும் மோசமடைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெயின் விலை நிலையாக இருந்தபோதிலும் பெட்ரோல் டீசல் ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
வேலையின்மை அதிகரித்துவரும் அதே சமயத்தில், ஊதியம் குறைக்கப்பட்டுள்ளது. மக்களின் வருமானம் குறைந்துள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.