கோழிகோடு : இந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக கேரள சபாநாயகர் ஏ.என். ஷம்சீர் மீது விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு மற்றும் பாஜக தரப்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஜூலை 21ஆம் தேதி எர்ணாகுளத்தில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏ.என் ஷம்சீர் கலந்து கொண்டு பேசினார். அப்போது, கல்வித் துறையில் கட்டுக் கதைகளுக்கு பதிலாக அறிவியலை ஊக்குவிக்க வேண்டும் என்று விமானத்தை கண்டுபிடித்தவர் யார் என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், விமானத்தை கண்டுபிடித்தது யார் என்று தன்னை கேட்டால், அதற்கு ரைட் பிரதர்ஸ் என்று பதில் அளிப்பேன் என்றும், ஆனால் இந்துத்துவ நம்பிக்கையாளர்களிடம் உலகின் முதல் விமானம் எது என்று கேட்டால் புஷ்பக விமானம் என்று பதில் அளிப்பார்கள் என்று கூறி சர்ச்சை கருத்து வெளியிட்டார்.
மேலும், விநாயகர் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் தான் தன் முகத்தைப் பெற்றதாக இந்துத்துவா சித்தாந்தவாதிகள் பிரசாரம் செய்து வருவதாகவும், அது கட்டுக்கதை என்றும் கூறினார். அறிவியலுக்குப் பதிலாக இந்துத்துவவாதிகள் இது போன்ற கட்டுக் கதைகளை ஊக்குவிப்பதாக அவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சபாநாயகர் ஏ.என் ஷம்சீரின் கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது, இந்துகளின் மனதை புண்படுத்தும் வகையில் அவரது கருத்து இருப்பதாக பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பாஜக தரப்பில் மாநிலம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
கேரள மாநிலத்தை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் சபாநாயகர் ஏ.என் ஷம்சீர் வெளியிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரன், பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் அமித் மலவ்யா உள்ளிட்டோர் சர்ச்சை கருத்து விவகாரத்தில் கேரள சபாநாயகர் ஏ.என். ஷம்சீரை கடுமையாக விமர்சித்து உள்ளனர்.
இதையும் படிங்க : டெல்லி அவசர சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் - தகவல்!