புதுச்சேரி: புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவராக முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆதரவாளர் ஏ.வி சுப்பிரமணியம் இருந்து வருகிறார். அவர் தலைமையில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்த அக்கட்சி கடும் தோல்வி அடைந்தது, 30தொகுதிகளில் 2சட்டப்பேரவை தொகுதிகளை மட்டுமே பிடித்தது.
தலைவரை மாற்றக் கோரிக்கை: இதனால் கட்சியில் தலைவரை மாற்றக் கோரி கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தலைமையை வற்புறுத்தி வந்தனர். மேலும் கட்சி வெற்றி பெறும் தொகுதிகளைக் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கீடு செய்தது. பணபலம் உள்ளவர்கள் மற்றும் செல்வாக்கு இல்லாதவர்களுக்கு சீட்டு ஒதுக்கியது.
கட்சியில் இருந்தவர்களை அரவணைத்து செல்லாததால் முக்கிய நிர்வாகிகள் மாற்று கட்சிக்கு சென்றதாகவும் புகார்கள் மேலிடத்துக்கு அனுப்பினர். இதற்கிடையில் கட்சி தலைவர் பதவி பெறுவதில் முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் அரசு கொறடா அனந்தராமன் முன்னாள் அமைச்சர் ஷாஜகான் ஆகியோர் மும்முரம் காட்டி அதற்கான காய்களை நகர்த்தி வருகின்றனர்.
இதற்காக கடந்த வாரம் தனித்தனியாக டெல்லி சென்ற முன்னாள் அமைச்சர் கந்தசாமி சோனியாவை சந்தித்தார். முன்னாள் அரசுகொறடா அனந்தராமன் ராகுல் காந்தியை 3நாட்களுக்கு முன் சந்தித்துள்ளார்.
கட்சியினரிடையே பல்வேறு கேள்விகள்: இதையடுத்து புதுச்சேரியில் கட்சி முக்கிய நிர்வாகிகளை சந்தித்து அவர்கள் மறைமுக ஆதரவு கேட்டுவருகின்றனர். கட்சி தலைவர் பதவி பெறுவதில் காங்கிரஸ் கட்சி முக்கிய நிர்வாகிகள் டெல்லி மற்றும் புதுச்சேரி முக்கிய நிர்வாகிகளை சந்தித்து வந்தும் கட்சி தலைவர் பதவி பெறுவதில் காய்நகர்த்தி வருகின்றனர்.
யாருக்கு தலைவர் பதவி ? தற்போதைய தலைவரே கொண்டு உள்ளாட்சித் தேர்தலை சந்திபதா..? என்ற பல கேள்விகள் சட்டப்பேரவைத் தேர்தல் பணியில் சோர்வடைந்த கட்சியினரிடையே எழுந்துள்ளது என்று அக்கட்சியின் முக்கிய நிர்வாகி தெரிவித்துள்ளார்.