டெல்லி: டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலய திறப்பு விழா நாளை (ஏப்ரல் 2) நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக நான்கு நாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மார்ச் 30 ஆம் தேதி டெல்லி சென்றார்.
இந்நிலையில் நேற்று (மார்ச் 31) பிரதமர் மோடியை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின், அண்ணா - கலைஞர் அறிவாலய அலுவலக கட்டட திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். மேலும் பிரதமர் மோடியிடம் தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.
முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது , திமுக அலுவலக கட்டட திறப்பு விழாவில் பங்கேற்க வருமாறு அவர் அழைப்பு விடுத்தார். அதனைத்தொடர்ந்து, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
அதன் பின்னர், ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்தார். மேலும், ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரியை ஸ்டாலின் சந்தித்து, தமிழ்நாட்டிற்கான நெடுஞ்சாலைத் துறை திட்டங்கள் தொடர்பாக கோரிக்கை விவரங்களை அளித்தார்.
இதனிடையே, இன்று (ஏப்ரல் .1) முதலமைச்சர் ஸ்டாலின் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். அப்போது, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். இதில், ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க கோரி நிர்மலா சீதாரமனிடம் முதலமைச்சர் வலியுறுத்தியுனார். இதேபோல் தமிழ்நாடு சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை விடுவிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலை ரூ.268.50 உயர்வு!