புதுச்சேரி திருபுவனத்தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராகத்தேர்ந்தெடுக்கப்பட்டவர், அங்காளன். இவர் தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜகவிற்கு ஆதரவளித்து வருகிறார். இந்நிலையில், அவருடைய தொகுதியில் பல்வேறு நலத்திட்டப்பணிகள் ஆளும் அரசால் புறக்கணிக்கப்படுவதாக கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின்போது பேசி இருந்தார்.
ஆனால், இதுவரை அந்தத் தொகுதியில் எந்த ஒரு மக்கள் நலத்திட்டப் பணிகளும் செயல்படுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று(செப்.23) திருபுவனைத்தொகுதி சட்டப்பேரவை பாஜக ஆதரவு எம்எல்ஏ அங்காளன், தனது ஆதரவாளர்களுடன் புதுச்சேரி சட்டசபை படிக்கட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், 'பாஜக ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்களின் தொகுதிக்கு எந்த ஒரு திட்டங்களையும் செயல்படுத்தக்கூடாது என்று ரங்கசாமி வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாகப் புகார் உள்ளது . மேலும் மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கியது, மதுபான மற்றும் சாராயக்கடைகளுக்கு ஏலம்விட்டதில் ஊழல் முறைகேடு நடந்துள்ளது. இதன் மீது சிபிஐ விசாரணை வைக்க வேண்டும்' என்றார்.
புதுச்சேரியில் பாஜகவை ரங்கசாமி அழிக்க நினைப்பதாக குற்றஞ்சாட்டிய அவர் உடனடியாக முதலமைச்சர் ரங்கசாமி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் இது தொடர்பாக
விரைவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ரங்கசாமி மீது புகார் அளிக்க உள்ளதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: நிலம் இங்கே... மருத்துவமனை எங்கே? மதுரை எய்ம்ஸிற்கு படையெடுத்த எம்.பி.க்கள்