ஒடிசா: ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்தில் நேற்று பெரும் ரயில் விபத்து நிகழ்ந்துள்ளது. கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி சென்ற கோரமண்டல் விரைவு ரயில் விபத்துக்குள்ளானதில் சுமார் 238 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், 900-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று மாலை நடந்த இந்த கோர விபத்தைத் தொடர்ந்து, மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (ஜூன் 3) விபத்து நடந்த இடத்திற்கு அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
தொடர்ந்து அங்கு நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் குறித்து உயர் அதிகாரிகளிடம் கேட்டறிந்த அவர், உயிர் சேதங்களை தவிர்க்கும் அளவிற்கு பணி துரிதமாக நடைபெறவேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இந்த ரயில் விபத்து நடந்த இடத்திற்கு அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் வருகை தந்தபோது அவருடன் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். இதனைத்தொடர்ந்து படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சந்தித்த முதலமைச்சர் நவீன் பட்நாயக் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
முன்னதாக, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப் பணிகளை பார்வையிட்டார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ரயில் விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார். மேலும், ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு-ஹார்வா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகிய மூன்று ரயில்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதியதே இந்த கோர விபத்திற்கு காரணம் எனவும், இந்த இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் 18-க்கும் மேற்பட்ட பெட்டிகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன எனவும் கூறினார்.
இதனைத்தொடர்ந்து, ஒடிசா விபத்து நடந்த இடத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் படி போக்குவரத்து துறை அமைச்சர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உள்ளிட்ட பலர் அடங்கிய சிறப்பு குழுவினர் விரைந்துள்ளனர். அதில் திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜயந்த், ஆசிரியர் தேர்வாணையக் குழுவின் தலைவர் அர்ச்சனா பட்நாயக் ஆகியோர் கொண்ட குழு ஒடிசா சென்றுள்ளது. அவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீட்பு பணிகளில் உடனிருந்து தமிழ்நாட்டினருக்கு தேவையான உதவிகளை செய்திட வேண்டும் என மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இன்று ஒரு நாள் மட்டும் துக்கம் அனுசரிக்கப்படும் என ஒடிசா மற்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசின் சார்பில் இன்று நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுள்ளதாகவும் இருமாநில முதலமைச்சர்களும் அறிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: Coromandel Express accident: தமிழ்நாட்டில் இன்று ஒரு நாள் துக்க அனுசரிப்பு - முதலமைச்சர் அறிவிப்பு