புதுச்சேரி துணைநிலை ஆளுநரின் செயல்பாட்டைக் கண்டித்தும், அவர் புதுச்சேரியை விட்டு வெளியேற வேண்டும் என வலியுறுத்தியும் காங்கிரஸ், அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் அண்ணா சதுக்கம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, "மாநில அரசுக்கு கொடுக்க வேண்டிய நிதியை வழங்க மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்திவருகிறோம். நிதியைத் தராமல் மத்திய அரசு வஞ்சிக்கிறது. அரசின் அன்றாட நிகழ்வுகளில் துணைநிலை ஆளுநர் தலையிடுகிறார்.
51 திட்டங்களைக் கிடப்பில் போட்டு மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்படுத்த கிரண்பேடி செயல்பட்டுவருகிறார். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் 20 கிலோ இலவச அரசி ஆறு மாத காலம் வழங்கப்பட்டது. அரிசி கொள்முதல்செய்ததில் ஊழல் நடக்கிறது எனத் துணைநிலை ஆளுநர் குற்றம் சாட்டுகிறார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் கிரண்பேடி தனக்குதான் அதிகாரம் உள்ளது என்றும் சர்வாதிகாரி போல் செயல்பட்டுவருகிறார். புதுச்சேரி மாநில மக்களின் உரிமையைப் படிப்படியாகப் பறிக்கும் வேலையை கிரண்பேடி செய்துவருகிறார்.
உயிர்த்தியாகம் செய்தாவது புதுச்சேரியைக் காப்பாற்றுவேன். துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை உடனடியாகப் பிரதமர் திரும்பப்பெற வேண்டும்" என வலியுறுத்தினார்.
ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்தில் 200-க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினர், காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்