இது தொடர்பாக முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ’நடப்பு நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும்போது அமைச்சரவை ஒப்புதலுடன் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள குடும்பங்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை மாற்றி அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி புதுச்சேரியில் வசிக்கும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் மருத்துவ சிகிச்சை பெறும் வகையில் முழு சுகாதார பாதுகாப்பு திட்டம் அறிவிக்கப்பட்டு, அதற்கான நிதி ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்தை புதுச்சேரி அரசும், மத்திய அரசின் தேசிய சுகாதார நிறுவனமும் பிரதமர் ஜன் ஆரோக்கிய திட்டத்துடன் இணைந்து நடைமுறைப்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.
அமைச்சரவை, சட்டப்பேரவை, சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் மத்திய அரசின் தேசிய சுகாதார நிறுவனம் உட்பட அனைவரும் ஒப்புக்கொண்ட பின்னரே, இத்திட்டத்தினை நிறைவேற்றுவதற்கான அரசாணை வழங்கிட ஏதுவாக துணைநிலை ஆளுநருக்கு கோப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்படி 3.50 லட்சம் ரூபாய் குடும்ப உணவு பங்கீட்டு அட்டைதாரர்களுக்கு, காப்பீட்டு தொகையின் 60 விழுக்காட்டை மத்திய அரசு தேசிய சுகாதார நிறுவனமும், மீதி 40 விழுக்காடு தொகையை புதுச்சேரி அரசும் வழங்கிடும்.
புதுச்சேரியில் குடும்ப உணவு பங்கீட்டு அட்டை வைத்துள்ள அனைவரும் இந்த அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் எங்குவேண்டுமானாலும் அரசு காப்பீட்டு திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 5 லட்சம் ரூபாய் வரை இலவசமாக மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.
இத்திட்டம் இந்தியாவிலேயே முதல் முறையாக அனைத்து மக்களும் மருத்துவ காப்பீடு பெறும் வகையில் புதுச்சேரி அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பொங்கல் திருநாளில் புதுச்சேரி மக்களுக்கான பொங்கல் பரிசாக இதை அளிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்’என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:சுற்றுச்சூழல் பாதுகாப்பை தாரைவார்க்கும் மத்திய- மாநில அரசுகள் - காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்திற்கு ஸ்டாலின் எதிர்ப்பு!