பெங்களூரு: கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை சில வாரங்களுக்கு முன்பு, தனியார் செய்தி நிறுவன நேரலையில் கலந்துகொண்டார். அப்போது முதலமைச்சரிடம் பேசிய மஞ்சனகோப்பா கிராமத்தைச் சேர்ந்த கமலவ்வா என்னும் மூதாட்டி தெரிவிக்கையில், "எனது மகன்கள் இருவரும் இறந்துவிட்ட நிலையில் தனியாக வசித்துவருகிறேன்.
அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக எனது வீடு அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை. தங்குவதற்கும், செல்வதற்கும் எனக்கு வேறு இடம் கிடையாது. எனக்கு வீடு கட்டித்தருமாறு கேட்டுகொள்கிறேன்" என்றார். இதனைக்கேட்ட முதலமைச்சர் மகர சங்கராந்திக்குள் புதிய வீடு கட்டித்தருவதாக உறுதி அளித்தார்.
அதன்படி முகப்புக் கூடம், படுக்கையறை, சமையலறை, பூஜை அறையுடன் கூடிய புதிய வீடு கட்ட மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டது. அந்த பணிகள் முடிவடைந்து, இன்று வீட்டின் சாவி மூதாட்டியிடம் வழங்கப்பட்டது. அப்போது மாவட்ட ஆட்சியர் உடனிருந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மூதாட்டி வசிக்கும் பகுதி, முதலமைச்சரின் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கர்நாடகாவில் விஸ்வரூபம் எடுக்கும் கரோனா