ஜார்கண்ட் மாநிலத்தில் மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்த், ஆட்டோ ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.
முதல்கட்டமாக விபத்து ஏற்படுத்திய ஆட்டோ ஓட்டுநரைக் கைதுசெய்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். இச்சம்பவத்தில் தாதா அமந்த்சிங் கும்பலுக்குத் தொடர்பு இருக்கலாம் எனக் காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.
உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் விகாஸ் சிங், தாதாவுக்கு பிணை வழங்க மறுத்ததற்காக தன்பாத் நீதிபதி கொல்லப்பட்டது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்தார்.
இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி என்.வி. ரமணா, "ஜார்கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் இது குறித்துப் பேசினேன். இச்சம்பவம் தொடர்பாக ஜார்கண்ட் அரசு தீவிர விசாரணை நடத்திவருகிறது.
இந்த விவகாரம் குறித்து ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் இன்றுதான் விசாரிக்கத் தொடங்கியுள்ளது. எனவே, உச்ச நீதிமன்றத்தின் தலையீடு தற்போது தேவையில்லை" எனக் கூறினார்.
இதையும் படிங்க: கல்வித்துறையில் புதிய திட்டங்களை தொடங்கிவைக்கும் பிரதமர்