ஹைதராபாத்: சாக்லேட்.. இந்த பெயரைக் கேட்டாலே அதன் இனிப்புச்சுவைதான் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவர்களின் நினைவில் வரும். ஆனால், ஆரம்ப காலத்தில் சாக்லேட் கசப்புச்சுவையுடன் இருந்தது என்றால் நம்ப முடிகிறதா? நீங்கள் நம்பவில்லை என்றாலும் அதுதான் நிஜம். உலக சாக்லேட் தினம் கொண்டாடப்படும் நிலையில்.. கசப்பு சாக்லேட் இனிப்பானது எப்படி? முதுமையைத் தடுக்க சாக்லேட் பயன்படுவது எப்படி என சுவாரஸ்ய தகவல்களைப் பார்க்கலாம். இன்று நிறுவனங்களுக்கு ஏற்றவாறு விதவிதமாக சாக்லேட்டுகள் உள்ளன.
நாடுகளுக்கேற்றவாறும் வகைகள் உள்ளன, தமிழ்நாட்டில் கூட நீலகிரி போன்ற மலைவாச ஸ்தலங்களில் தயாரிக்கப்படும் சாக்லேட்டுகளுக்கு தனி மவுசு உண்டு. ஆனால், பொதுவாகவே சாக்லேட் மூன்று வகைதான். டார்க் சாக்லேட், மில்க் சாக்லேட், வொயிட் சாக்லேட் என மூன்றாகத்தான் குறிப்பிடுகின்றனர். இதனுடன் சுவை, நிறம், பிளேவருக்காக வேறு பல பொருட்களை சேர்த்து பல வகையான சாக்லெட்டுகள் தயாரிக்கப்படுகின்றன.
சாக்லேட்டின் வரலாறு சுமார் 2,500ஆண்டுகளுக்கு முந்தையது என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அப்போதெல்லாம், டீ, காபி போல சாக்லேட்டும் குடிக்கக்கூடிய பானமாகத் தான் இருந்தது. கி.மு 2,000 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் மழைக்காடுகளில் கொக்கோ மரத்தின் விதைகளை, பதப்படுத்தி சாக்லேட் தயாரித்ததற்கான தடயங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதேபோல், ஆரம்ப காலத்தில், சாக்லேட் மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்காவில் மட்டும் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து, கடந்த 1528ஆம் ஆண்டில் ஸ்பெயின் மெக்சிகோவைக் கைப்பற்றியதை, அப்போது அங்கு ஸ்பெயின் மன்னர் அதிக அளவு கொக்கோ பயிரிட்டதுடன் சாக்லேட் தயாரிப்பையும் அதிகரித்தார். அதனைத்தொடர்ந்து ஸ்பானிஷ் பிரபுக்கள் மத்தியில் சாக்லேட் ஒரு நாகரிக பானமாக மாறியது என வரலாறுகள் குறிப்பிடுகின்றன.
சாக்லேட் உலகெங்குமுள்ள மக்களால் விரும்பப்படவே வணிகமாக உருவமெடுத்தது. இதன் பின்னர்தான், 17ஆம் நூற்றாண்டில் ஐரிஷ் மருத்துவர் சர் ஹான்ஸ் ஸ்லோன் என்பவர் மென்று சுவைத்து உண்ணும் பதத்திற்கு சாக்லேட்டை மாற்றியுள்ளார். தொடர்ந்து மெல்லக்கூடிய சாக்லேட்டைக் கண்டுபிடித்து இருபத்தைந்து ஆண்டுகள் கடந்த நிலையில், சிகாகோவில் உலக கொலம்பிய கண்காட்சி ஒன்று நடத்தப்பட்டது. இந்த கண்காட்சியில் சாக்லேட்டுகளுடன் ஸ்லோனின் சாக்லேட் செயலாக்க உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
அங்கு மில்டன் என்பவர் அந்த உபகரணங்களை வாங்கிய நிலையில் உலகப்புகழ் பெற்ற காட்பரி சாக்லேட் நிறுவனம் இங்கிலாந்தில் தொடங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து 1860ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நெஸ்ட்லே மில்க் சாக்லேட் நிறுவனம் இப்போது உலக அளவில் பிரபலமாகியுள்ளது.
மேலும் கடந்த 1300 முதல் 1521ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மத்திய மெக்சிகோவில் வாழ்ந்த அசுடெக் நாகரிக மக்களின் கலாசாரத்தில் சாக்லேட் இன்றியமையாதது எனக்கூறப்படுகிறது. மெக்சிகா கலாசாரம் என்றும் அறியப்படும் இக்கலாசாரத்தில் வாழ்ந்த மக்கள் பாலுணர்வை ஊக்குவிக்க சாக்லேட்டுகளை உட்கொண்டதாக வரலாற்றுப் பதிவுகள் சில குறிப்பிடுகின்றன.
பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தரும் இந்த சாக்லேட் உள்ள டிரிப்டோபான் நமது மூளையில் உள்ள எண்டோர்பின் அளவை மாற்றத்தை ஏற்படுத்தி மகிழ்ச்சி உணர்வைத் தூண்டுகிறது எனவும் கூறப்படுகிறது. அது மட்டுமின்றி, வயது ஆகும்போது ஏற்படும் நினைவாற்றல் குறைபாட்டை சாக்லேட் கட்டுப்படுத்தும் எனவும் கூறப்படுகிறது.
இப்படி பல நன்மைகள் தரும் சாக்லேட்டை அளவோடு உட்கொண்டால் இதயம் தொடர்பான அனைத்து நோய்களுக்கும் தீர்வாக அமையும் எனவும் ஆய்வுகள் சில குறிப்பிடுகின்றன. உங்கள் உடல்நிலைக்கு ஏற்ற டார்க் சாக்லேட்டை மருத்துவர் பரிந்துரையுடன் சாப்பிட்டு தினந்தோறும் சாக்லேட் தினத்தை கொண்டாடுங்கள்.
இதையும் படிங்க: Tomato Price Hike: உத்தரகாண்டில் உச்சத்தைத் தொட்ட தக்காளி விலை!