டெல்லி: அருணாச்சலப் பிரதேசத்தில் கடந்த 9ஆம் தேதி தவாங் எல்லைப்பகுதியில் ஊடுருவ முயன்ற சீன வீரர்களை இந்திய வீரர்கள் விரட்டி அடித்தனர். அப்போது இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த தாக்குதலில் இருதரப்பு வீரர்களும் காயமடைந்தனர். இந்திய வீரர்களின் தாக்குதலையடுத்து சீன வீரர்கள் பின்வாங்கினர். இந்த மோதல் சம்பவத்தால் எல்லையில் பதற்றம் நிலவியது.
சில நாட்களுக்குப் பிறகு இந்திய - சீன எல்லையில் நிலைமை சீராக இருப்பதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்தது. இதனிடையே கடந்த 20ஆம் தேதி இந்தியா - சீனா இடையே 17வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. சீன எல்லைப் பகுதியில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் ராணுவ கமாண்டர்கள் கலந்து கொண்டனர்.
இதில் மேற்கு எல்லைப் பகுதியில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை பராமரிக்க வேண்டும் என இருதரப்பினரும் ஒப்புதல் அளித்ததாக தெரிகிறது. அதேபோல் எல்லைப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இருதரப்பும் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.
இந்த நிலையில், எல்லைப் பகுதிகளில் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதில் இந்தியாவும் சீனாவும் உறுதியுடன் இருப்பதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார். இருநாடுகளும் ராணுவம் மற்றும் ராஜாங்க ரீதியாக தொடர்பில் இருப்பதாகவும், இருநாடுகளும் எல்லையில் அமைதி நிலவ உறுதிபூண்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்தியா - சீனா உறவுகளை வலுப்படுத்த இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: Tawang Sector: தவாங்கை குறிவைக்கும் சீனா.. அருணாச்சல் எல்லையில் நடப்பது என்ன?