டெல்லி: நடப்பு ஆண்டில் நடைபெறும் ஜி20 உலக மாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்கி நடத்தி வருகிறது. அந்த வகையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநரில் வருகிற 22 முதல் 24ஆம் தேதி வரை ஜி20 சுற்றுலாக் கூட்டம் நடைபெற உள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது. இதற்காக பல்வேறு நாட்டைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், தொடரும் எல்லைப் பிரச்னை காரணமாக ஸ்ரீநகரில் நடைபெற உள்ள ஜி20 சுற்றுலாக் கூட்டத்தை சீனா புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளது. மேலும், இது குறித்து நேற்று (மே 19) சீனாவின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் வாங்க் வென்பின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
இந்த அறிவிப்பில், "சர்ச்சைக்குரிய பகுதிகளில் நடைபெறும் ஜி20 கூட்டங்களுக்கு சீனா கடும் எதிர்ப்பை பதிவு செய்கிறது. அது மட்டுமல்லாமல், சர்ச்சைக்குரிய பகுதிகளில் நடைபெறும் ஜி20 கூட்டங்களில் சீனா கலந்து கொள்ளாது" என தெரிவித்து உள்ளார். இதன்படி, ஜி20 கூட்டத்தை சீனா 2வது முறையாக புறக்கணித்து உள்ளது.
முன்னதாக கடந்த மார்ச் 26ஆம் தேதி அருணாச்சலப்பிரதேச மாநிலத்தின் தலைநகர் இடா நகரில் நடைபெற்ற ஜி20 கூட்டத்தையும் சீனா புறக்கணித்து இருந்தது. கடந்த 2020ஆம் ஆண்டு லடாக்கில் நடைபெற்ற ராணுவப் போரில் 24 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து இந்தியா - சீனா இடையேயான எல்லைப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது.
இருப்பினும், நாட்டின் எல்லைகளில் அமைதியை நிலைநாட்டி, இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவதில் இந்தியா முக்கிய பங்கு வகித்து வருகிறது. அதேநேரம், இந்தியா தனது சொந்த இடத்தில் தான் கூட்டத்திற்கான களத்தை தேர்ந்தெடுத்துள்ளது என்பதும் இந்தியாவின் வாதமாக உள்ளது.
அதேபோல், சீனாவின் புறக்கணிப்புக்கு மத்தியிலும், ஜி20 கூட்டத்தை நடத்துவதற்கான பணியில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சீனா, துருக்கி மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் இதுவரை தங்களை பதிவு செய்து கொள்ளவில்லை. இந்த ஜி20 சுற்றுலா கூட்டத்தின் முக்கிய நிகழ்வு, வருகிற 22 மற்றும் 23 ஆகிய நாட்களில் ஷெர்-ஐ-காஷ்மீர் இண்டர்நேஷ்னல் மாநாட்டு மையத்தில் (SKICC) வைத்து நடைபெற உள்ளது.
100க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளதாக எதிர்பார்க்கப்படும் இந்த கூட்டம் நடைபெறும் இடமானது, சர்வதேச தரத்திலும், சுற்றுலாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தயாராகி வருகிறது. இதன் மூலம் நாட்டின் கலாசாரம், சுற்றுலா மற்றும் ஜம்மு - காஷ்மீரின் கலை ஆகியவை சிறப்பாக வெளிப்படும் என நம்பப்படுகிறது.
இதற்காக ஜம்மு - காஷ்மீர் அரசு ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமும், பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது மூலமும் ஜி20 கூட்டத்தின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு கொண்டு சென்று வருகிறது. அது மட்டுமல்லாமல், காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் யூத் - 20 என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, அதன் மூலம் மாநாட்டின் முக்கியத்துவத்தை கல்லூரி மாணவர்கள் மத்தியில் கொண்டு சென்றது.
இதையும் படிங்க: G7 Summit : ஹிரேசிமாவில் மகாத்மா காந்தி சிலையை திறந்த பிரதமர் மோடி.. தென்கொரிய அதிபருடன் பேச்சுவார்த்தை!