நொய்டா: உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள நிராலா ஆஸ்பியர் சொசைட்டி என்னும் அடுக்குமாடி குடியிருப்பில் இன்று (டிசம்பர் 2) விவான் என்னும் 8 வயது சிறுவன் லிப்டில் சிக்கிக்கொண்டான். இந்த லிப்ட் 4ஆவது மற்றும் 5ஆவது மாடிகளுக்கு இடையே சென்றுகொண்டிருந்தபோது தொழில்நுட்பக்கேளாறு காரணமாக நின்றுவிட்டது. சுமார் 10 நிமிடங்களாக சிறுவன் உள்ளேயே சிக்கிக் கொண்டு கூச்சலிட்டுள்ளான். இதனிடையே கண்காணிப்பு அறைக்கு எச்சரிக்கை கொடுக்கும் பொத்தானை அழுத்தினான்.
ஆனால், கண்காணிப்பு அறையில் பாதுகாப்பு அலுவலர் இல்லாததால் பயனில்லாமல்போனது. நல்வாய்ப்பாக, 5ஆவது மாடியில் லிப்ட்டுக்காக காத்திருந்த நபர் ஒருவர் சிறுவன் மாட்டிக்கொண்டுள்ளதை அறிந்து அக்கம் பக்கத்தினருக்கு தகவல் கொடுத்தார். அதனடிப்படையில் சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான். இந்த சம்பவம் சிறுவன் டியூஷன் முடித்து வீட்டிற்கு திரும்பிகொண்டிருந்தபோது நடந்துள்ளது. இதேபோல பலமுறை லிப்ட் பாதியில் நின்றுள்ளதாகவும், புகார் அளித்தும் அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் சிறுவனின் தந்தை பிரியான்சு குற்றம் சாட்டியுள்ளார். இந்த நிலையில், சிறுவன் சிக்கிக்கொண்ட லிப்டில் பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: மொட்டை வெயிலில் பயணிகள் அவதி : மொபைல் பேருந்து நிறுத்தம் உருவாக்கிய இளைஞர்கள்...