சத்தீஸ்கர் மாநிலம், ஜாங்கிரி-ஷம்பா மாவட்டத்தில் உள்ள பிஹ்ரிட் கிராமத்தில் , கடந்த வெள்ளிக்கிழமை அன்று வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ராகுல், 80 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். சிறுவன் வெகு நேரமாக வீடு திரும்பாததை உணர்ந்த பெற்றோர், அவனை தேடியுள்ளனர். அப்போது தான் அவன் 120 அடிக்கு போடப்பட்ட போரில் விழுந்தது தெரியவந்தது.
இது குறித்து கிடைத்த தகவலின் பேரின் போலீசாரும் , தீயணைப்பு துறையினரும் நேரில் சென்று மீட்பு பணியை தொடங்கினர். தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்ததும் ஆட்சியர் ஜிதேந்திர சுக்லா தலைமையிலான அதிகாரிகள் நேரில் சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.
மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டதால் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் , வல்லுநர்களும் வரவழைக்கப்பட்டனர். இதனிடையே மருத்துவர்களும் வரவழைக்கப்பட்டு , சிறுவனுக்கு ஆக்சிஜன் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. தொடர்ந்து ரோபோட்டிக் உபகரணங்கள் மற்றும் அதி நவீன கருவிகளை கொண்டு மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கை தோல்வி அடைந்தது.
இதனால் ஆழ்துளை கிணற்றின் மிக அருகிலேயே சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கியது. இதற்காக தனியார் நிறுவனங்களின் உதவியும் நாடப்பட்டது. கிட்டத்தட்ட 150க்கும் மேற்பட்டோர் இந்த மீட்பு பணியில் ஈடுபட்டனர். இறுதியாக 110 மணி நேர போராட்டத்துக்கு பின் சிறுவன் உயிருடன் மீட்கபட்டான். தொடர்ந்து அவனை மீட்பு குழுவினர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் ராகுலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மீட்பு பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் , ராகுல் உயிர் பிழைக்க இறைவனிடம் வேண்டிய அனைவருக்கும் அம்மாநில முதலமைச்சர் பூபேஷ் நன்றி தெரிவித்துள்ளார்.