சிக்கமகளூரு: கர்நாடகாவின் சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர். புரம் வட்டத்தில் உள்ளது ஜவகர் நவோத்யா வித்யாலயா பள்ளி. இங்கு சில நாள்களுக்கு முன் ஆசிரியர் ஒருவருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அப்பள்ளியில் அவருடன் தொடர்பிலிருந்த ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாதவர்கள், மாணவர்கள் என மொத்தம் 418 பேரிடம் கரோனா தொற்று பரிசோதனை மாதிரிகள் சேகரிக்கப்பட்டது.
பள்ளியில் தனிமைப்படுத்தப்பட்டனர்
பின்னர், டிசம்பர் 4ஆம் தேதி 40 மாணவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, மாவட்ட நிர்வாகத்தால் அப்பள்ளி மூடப்பட்டது. இதையடுத்து, நேற்று முன்தினம் (டிசம்பர் 5) மேலும் அப்பள்ளியைச் சேர்ந்த 30 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது.
இந்நிலையில், அப்பள்ளியின் தொற்று எண்ணிக்கை நேற்றும் (டிசம்பர் 6) அதிகரித்துள்ளது. நேற்று 37 பேருக்கு தொற்று உறுதியானதை அடுத்து, அப்பள்ளியின் தொற்று எண்ணிக்கை மொத்தம் 107 ஆக உயர்ந்துள்ளது. இதில், மாணவர்கள் 94 பேர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் உள்பட அனைவருக்கும் எவ்வித தொற்று அறிகுறியும் காணப்படவில்லை. தொற்றாளர்கள் அனைவரும் தற்போது அந்தப் பள்ளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அப்பள்ளியில் சுகாதாரத்துறை பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார அலுவலர், மருத்துவர். வெங்கடேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
அச்சப்படவேண்டாம் - அமைச்சர்
ஒரே பள்ளி 107 பேருக்கு கரோனா தொற்று பரவியுள்ளது கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து கர்நாடக தொடக்கம் மற்றும் மேல்நிலைக் கல்வித்துறை அமைச்சர் பி.சி. நாகேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, "பள்ளிகள் மூட வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதுகுறித்து முடிவெடுக்க நாங்கள் தயங்கமாட்டோம். ஆனால், தற்போது எந்த பிரச்சனையும் இல்லை என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
அதேபோன்று, தேர்வுகளும் தேவைப்பட்டால் நிறுத்தப்படும். இருப்பினும், தேர்வு நேரத்தில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் இன்னும் கடுமையாகப் பின்பற்றப்படும். மேலும், தேர்வில் மாணவர்களின் இருக்கைகளுக்கான இடைவெளியை அதிகரித்துள்ளோம்.
இதுகுறித்து, யாரும் அச்சப்பட வேண்டாம். ஏனென்றால், பொது முடக்கத்திற்குப் பின் ஓராண்டு கழித்துதான் நாம் நேரடி வகுப்புகளைத் திறந்துள்ளோம். தற்போது, பள்ளிகளை மூடிவிட்டால், மீண்டும் மாணவர்களைப் பள்ளிக்கு வரவைப்பது கடினமாகிவிடும்" என்றார்.
இதையும் படிங்க: Omicron - மகாராஷ்டிராவில் மேலும் இருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு