புதுச்சேரி: குடியரசுத்தலைவர் தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த திரெளபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் யஸ்வந்த் சின்காவும் போட்டியிடுகின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான திரௌபதி முர்மு, வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
அந்த வகையில், புதுவை மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களிடம் ஆதரவு திரட்டுவதற்காக அவர் புதுச்சேரிக்கு வந்துள்ளார். தனியார் ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுச்சேரியில் உள்ள என். ஆர். காங்கிரஸ், பாஜக, அதிமுக மற்றும் கூட்டணிக்கட்சிகள் கலந்து கொண்டு திரௌபதி முர்முவிற்கு ஆதரவு அளிப்பது குறித்து முடிவெடுக்கப்பட்டது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத்தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு பங்கேற்று உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய இணைய அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய மகளிர் அணித்தலைவி வானதி சீனிவாசன், புதுச்சேரி சபாநாயகர் செல்வம், புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், மாநில அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனி ஜெயக்குமார், சந்திர பிரியங்கா, சாய் சரவணகுமார், துணை சபாநாயகர் ராஜவேலு, புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி மற்றும் பாஜக, என்ஆர் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அதிமுக முக்கியத்தலைவர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் 30 சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 22 ஆளுங்கட்சி கூட்டணி, திமுக 6 காங்கிரஸ் 2 என 8 எதிர்க்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளனர். இதில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக மொத்தம் 22 சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள் எனத் தெரியவருகிறது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் திரௌபதி முர்மு, தெலங்கானாவில் யஷ்வந்த் சின்ஹா...