பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளான நேற்று (செப்.17) நாடு முழுவதும் இரண்டரை கோடிக்கும் அதிகமானோருக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தி உலக சாதனை படைக்கப்பட்டது. இதற்குப் பல்வேறு தரப்பினரும் பாராட்டுத் தெரிவித்துவருகின்றனர்.
அதேவேளை, பிரதமரின் பிறந்தநாளில் மட்டும் இந்த எண்ணிக்கை எப்படி சாத்தியம் என எதிர்க்கட்சியினர் விமர்சித்து கேள்வி எழுப்பிவருகின்றனர். காங்கிரஸ் மூத்தத் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ப. சிதம்பரம் இதை விமர்சித்து ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் தனது ட்வீட்டில், "பாஜக ஆளும் மாநிலங்களான உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், கர்நாடகா ஆகியவை மற்ற நாள்களைவிட பிரதமர் பிறந்தநாளில் தடுப்பூசி செலுத்திய எண்ணிக்கையைப் பன்மடங்கு அதிகரித்துள்ளது எப்படி?" வினா தொடுத்தார்.
மேலும், பிரதமரின் பிறந்தநாள் நாள்தோறும் வர வேண்டும் என ஆசைப்படுவதாக வஞ்சப்புகழ்ச்சியில் தெரிவித்தார்.
தனது மற்றொரு ட்வீட்டில், "தடுப்பூசித் திட்டம் ஒன்றும் கேக் வெட்டும் நிகழ்வுபோன்று அல்ல; பிரதமரின் பிறந்தநாள் டிசம்பர் 31ஆம் தேதி என்றால் அதுவரை மக்கள் காத்திருக்க வேண்டுமா?
நாள்தோறும் முறையாக நடைபெற வேண்டிய தடுப்பூசித் திட்டம் ஒரு குறிப்பிட்ட பிறந்தநாள் தேதியில் உச்சமடைவது சரியான அணுகுமுறை அல்ல.
நாட்டின் மூன்றில் ஒரு பங்கு மக்கள் இன்னும் ஒரு தவணை தடுப்பூசிகூட செலுத்திக்கொள்ளவில்லை. 21 விழுக்காடு மக்கள் மட்டுமே இரண்டு தடுப்பூசி தவணைகளையும் செலுத்தியுள்ளனர்" என விமர்சித்துள்ளார் ப. சிதம்பரம்.
இதையும் படிங்க: புதிய சாதனையுடன் தடுப்பூசி இலக்கை நோக்கி முன்னேறும் இந்தியா