சிந்தவாரா: மத்திய பிரதேச மாநிலம் சிந்தவாரா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ராம்தயால் வர்மா. இவரது தந்தை வாங்கிய கடனுக்கு 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் நிலுவை தொகை உள்ளதாகவும், அதை திருப்பிச் செலுத்துமாறும் வங்கியில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
மேலும் ராம்தயால் வர்மா கடன் தவணை குறித்து பதில் தெரிவிக்காத்தால் வங்கி அதிகாரிகள், அவரது வீட்டை ஜப்தி செய்ய வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராம்தயால் வர்மா மற்றும் அவரது உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்து உள்ளனர்.
அந்த புகார் மனுவில் பல திடுக்கிடும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன. ராம்தயால் வர்மாவின் தந்தை அஜாப் சிங் வர்மா ஒரு பாமரர். விவசாயியான அஜாப் சிங் வர்மா வங்கி உள்ளிட்ட எந்த நவீன வசதிகள் குறித்து அறியாதவர் என ராம்தயால் வர்மா தன் புகாரில் தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில், கடந்த 2006 ஆம் ஆண்டு அஜாப் சிங் வர்மா உடல் நலக் கோளாறு காரணமாக உயிரிழந்து உள்ளார். இந்நிலையில், அவர் 2009 ஆம் ஆண்டு வங்கிக் கடன் வாங்கியதாகவும் அதை திருப்பிச் செலுத்தக் கோரி வங்கி அதிகாரிகள் நோட்டிஸ் அனுப்பி உள்ளதாகவும் அந்த புகாரில் ராம்தயால் வர்மா தெரிவித்து உள்ளார்.
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், 2009 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கமல்நாத் அரசின் விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தில் மர்ம நபர்கள், அஜாப் சிங் வர்மாவின் அடையாளங்களை பயன்படுத்தி போலியாக ஆவணம் சமர்பித்து வங்கி கடன் பெற்று இருந்தது தெரிய வந்தது.
மேலும் வங்கி அதிகாரிகளின் நடவடிக்கையால், தங்களது அன்றாட வங்கி சார்ந்த பணிகளை கூட மேற்கொள்ள முடியாமல் தவித்து வருவதாக ராம்தயால் வர்மாவின் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்து உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2006 ஆம் ஆண்டு உயிரிழந்த விவசாயிக்கு 2009 ஆம் ஆண்டு வங்கிக் கடன் கொடுத்து அதை தற்போது திருப்பிச் செலுத்தக் கோரி வங்கி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க : சமையல் செய்தாததால் ஆத்திரம்.. மனைவியை அடித்து கொன்ற கணவர் கைது!