ராய்ப்பூர்: ஒடிசாவைச் சேர்ந்த சேர்மன் மஞ்சி, தனது மனைவி துலாரி பாயுடன் சத்தீஸ்கரில் உள்ள கோழிப் பண்ணை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்ததை அடுத்து, அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், கோழிப்பண்ணையின் உரிமையாளர், கார் மூலம் அவர்களை ஒடிசாவிற்கு அழைத்துச் செல்ல கடந்த சனிக்கிழமை முற்பட்டார். ஆனால், ஒடிசா காவல் துறையினர் அவர்களுக்கு அனுமதியளிக்க மறுத்துவிட்டனர்.
இதையடுத்து, இவர்கள் ரயில் மூலம் ஒடிசாவிற்கு செல்லத் திட்டமிட்டு மதியம் 2.30 மணியளவில் மகாசமுண்ட் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தனர். இந்நிலையில் சேர்மன் மஞ்சி ரயில் நிலையத்திலேயே எதிர்பாராதவிதமாக மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியில் ஆழ்ந்து, செய்வதறியாது தவித்த துலாரி பாய், அருகில் இருந்த ரயில்வே அலுவலர்களையும் காவலர்களிடம் உதவி கோரியுள்ளார். ஆனால் அவர்கள் மனமிறங்காத நிலையில், உதவி செய்யுமாறு துலார் பாய் மிகவும் வற்புறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார். அப்போதும் கரோனா அச்சத்தில் இருந்த அவர்கள் உதவ மறுத்துள்ளனர்.
இதையடுத்து, துலாரி பாய் தனது கணவரின் சடலத்துடன் சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக பரிதவித்து உதவிக்காக காத்திருந்தார். பின்னர் அங்கு வந்த பயணிகள் சிலர், மருத்துவ உதவி அவசர எண்களான 108 மற்றும் 112ஐ தொடர்பு கொண்டு நடந்தவற்றை விளக்கி உதவிக்கு அழைத்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவக் குழுக்கள் சடலத்தைக் கைப்பற்றி மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதையடுத்து, கரோனா மற்றும் உடற்கூராய்வுக்குப் பிறகு மஞ்சியின் சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு, அவரது மகன் இறுதிச் சடங்குகளையும் செய்தார். கரோனா அச்சுறுத்தலால் அவர்கள் உதவ மறுத்திருப்பினும், மருத்துவ உதவிகளையாவது ரயில்வே அலுவலர்களும், காவல் துறையினரும் செய்திருக்க வேண்டும் என பலரும் தங்களது ஆதங்கத்தினை தற்போது வெளிப்படுத்தி வருகின்றனர்.