சண்டிகர்: பஞ்சாப் மாநிலம், பதிண்டா என்ற இடத்தில் உள்ள மேம்பாலத்தில் பிரதமர் மோடியின் வாகன கான்வாய் போராட்டக்காரர்களால் 20 நிமிடங்கள் நிறுத்திவைக்கப்பட்டது. பதிண்டா விமான நிலையத்துக்கு உயிருடன் வந்தடைந்ததாகக் கூறிய பிரதமர் மோடி பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னிக்கு நன்றி தெரிவித்தார்.
இதனால் பிரதமரின் பாதுகாப்பு விஷயத்தில் அலட்சியமாக இருந்ததாக பஞ்சாப் அரசின் மீது பல்வேறு தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதனையடுத்து மோடியின் ஃபிரோஸ்பூர் பேரணி குறித்து, பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், "இது ஒரு ஆர்ப்பாட்டம், பாதுகாப்பு குறைபாடுடன் ஒப்பிடுவது தவறு. ஜனநாயகத்தில் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உண்டு. அதனால் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பாஜக தலைவர்கள் செய்தியாளர் சந்திப்புகளில் பேசி மக்களுடனான எங்களது உறவுகளை கெடுக்க முயற்சிக்கின்றனர். இந்த விவகாரத்தில் அரசியல் இருக்கக்கூடாது.
அமைதியாகப் போராட்டம் நடத்துபவர்கள் பிரதமரின் உயிருக்கு அச்சுறுத்தல் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். நேற்று(ஜன.5) நடந்த எதையும் பாதுகாப்பு குறைபாடு என கூற முடியாது. நாங்கள் பிரதமரிடம் வானிலை சரியில்லாததால் சுற்றுப்பயணத்தை ஒத்திவைக்க முடியுமா? அதைத் தள்ளிப்போடுங்கள் என கூறினோம். இருந்தும் அவர் தனது சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்தார்.
மோடி முதலில் ஹெலிகாப்டரில் அந்த இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட வேண்டும் என்றார். பின்னர் அதற்கு பதிலாக சாலை வழியாக செல்ல தேர்வு செய்துள்ளார். பாதுகாப்பு விவகாரத்தில் காவல்துறையின் பங்கு குறைக்கப்பட்டுள்ளது. உளவுத்துறை (ஐபி), சிறப்பு பாதுகாப்புக் குழு (எஸ்பிஜி) போன்ற ஒன்றிய அமைப்புகளே பிரதமரின் பாதுகாப்பை கவனித்து வருகின்றன.
எங்கள் வீட்டிற்கு வந்த விருந்தினரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், அவர்களுக்காக நானும், எனது அமைச்சரவையும் உயிரைக் கொடுக்க தயாராக உள்ளோம். பிரதமரின் பாதுகாப்பு ஒன்றிய அமைப்பின் மேற்பார்வையில் உள்ளது. இந்த சம்பவத்துக்காக வருந்துகிறோம். மோடி மீண்டும் பஞ்சாப் வருவதை வரவேற்கிறேன்” என்றார்.
இதனிடையே பஞ்சாப் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் பரப்புரை குழுத் தலைவருமான சுனில் ஜாகர் இந்த பிரச்சினை குறித்து நேற்று (ஜன.5) ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "இன்று நடந்ததை ஏற்க முடியாது. இது பஞ்சாபியத்துக்கு எதிரானது. பெரோஸ்பூரில் பாஜகவின் அரசியல் பேரணியில் இந்தியப் பிரதமர் உரையாற்றுவதற்கான பாதுகாப்பான வழியை உறுதி செய்திருக்க வேண்டும். இப்படித்தான் ஜனநாயகம் செயல்படுகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: K T Rajendra Balaji arrested: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைதும் பின்னணியும்!