டெல்லி: மனதின் குரல் நிகழ்ச்சியின் 93ஆவது பதிப்பில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப் 25) நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி, "இன்றிலிருந்து மூன்று நாட்களுக்குப் பிறகு, அதாவது செப்டம்பர் மாதம் 28ஆம் தேதியன்று அமுதப் பெருவிழாவின் ஒரு விசேஷமான நாள் வரவிருக்கிறது. அன்று நம் நாட்டின் வீரம் நிறைந்த பகத் சிங்குடைய பிறந்த நாளைக் கொண்டாடுவோம். பகத் சிங்கின் பிறந்த நாளுக்கு சற்று முன்பாக, அவருக்கு சிரத்தாஞ்ஜலிகளை அர்ப்பணிக்கும் பொருட்டு ஒரு மகத்துவம் வாய்ந்த முடிவு எடுக்கப்பட்டது.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சண்டிகர் சர்வதேச விமான நிலையத்துக்கு ஷாஹீத் பகத் சிங் பெயர் சூட்டப்படும். இது மிக நீண்ட காலமாக எதிர்பார்த்துக் காத்திருந்த ஒன்று. நாம் நமது சுதந்திரப் போராட்ட வீரர்களிடமிருந்து கருத்தூக்கம் பெற வேண்டும். அவர்களின் லட்சியங்களைப் பின்பற்றி நடந்து, அவர்கள் கண்ட கனவு பாரதத்தை உருவாக்க வேண்டும். இதுவே, அவர்களுக்கு நாம் செலுத்தும் நினைவாஞ்சலிகளாகும்.
உயிர்த்தியாகிகளின் நினைவிடங்கள், அவர்களின் பெயரில் இருக்கும் இடங்கள், அமைப்புக்களின் பெயர்கள் ஆகியன, நமது கடமைகள் குறித்து நமக்கு உத்வேகம் அளிக்கின்றன. சில நாட்கள் முன்பாக நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் உருவச்சிலையை நிறுவியதன் வாயிலாகவும் கூட, இதே போன்றதொரு முயற்சி எடுக்கப்பட்டது.
இப்போது உயிர்த்தியாகி பகத் சிங்கின் பெயரை சண்டிகர் விமானநிலையத்திற்குச் சூட்டியதும் கூட இதே திசையில் வைக்கப்பட்ட மேலும் ஒரு முன்னேற்றப்படி. நாம் எந்த வகையில் அமுதப் பெருவிழாவில் சுதந்திரப் போராட்ட வீரர்களோடு தொடர்புடைய சிறப்பான சந்தர்ப்பங்களைக் கொண்டாடி வருகிறோமோ, அதைப் போலவே செப்டம்பர் மாதம் 28ஆம் தேதியின் போதும், ஒவ்வொரு இளைஞரும் புதிய ஒரு முயற்சியில் கண்டிப்பாக ஈடுபட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக்காவலில் உள்ளாரா..? சீன ஊடகங்களில் தீயாய் பரவும் செய்தி..!