ஆந்திராவில் மேற்கு கோதாவரி மாவட்டத்தின் எலுரு பகுதியில் வசிக்கும் மக்கள் சிலர், கடந்த சில நாள்களாக வாந்தி, மயக்கம் போன்ற பாதிப்புகளுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
கடந்த மூன்று நாள்களில், இந்தப் புதிய நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500-ஐ தாண்டியுள்ளது. கோபரி தோட்டா, கொத்தபேட்டா, தூர்பூ வீதி, அருந்ததி பேட்டா ஆகிய இடங்களில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்குத் தலைவலி, வாந்தி, மயக்கம் போன்ற அறிகுறிகள் தென்பட்டுள்ளன. ஆந்திரா முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, நோயாளிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்நிலையில், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தனுடன் கலந்துரையாடியதையடுத்து, மூன்று பேர் கொண்ட மருத்துவ வல்லுநர்கள் குழு ஆந்திராவின் எலுருவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
நூற்றுக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதால், நோயின் வீரியத்தை அறிந்திட மத்திய அரசு களமிறங்கியுள்ளது. குழந்தைகளின் ரத்த மாதிரிகள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், குழந்தைகள் பாதிக்கப்பட்டதற்கான காரணங்களை அறிய தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும், வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்திவருவதாகவும் மாவட்ட ஆட்சியர் ரேவு முத்யலா ராஜு தெரிவித்துள்ளார். இதுவரை புதிய நோய் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.