கொல்கத்தா: மத்திய பாஜக அரசு மேற்கு வங்க மாநிலத்தின் சட்ட அதிகாரத்தில் தலையிடுவதாக, அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார். பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் பாதுகாப்பு வாகனம் தாக்கப்பட்ட விவகாரத்தில் அம்மாநில ஐபிஎஸ் அலுவலர்கள் மூன்று பேரை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்ட மத்திய அரசு குறித்து இவ்வாறு கூறியுள்ளார்.
அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி இன்று பரப்புரை மேற்கொண்ட அவர், " குஜராத் கலவரம் போன்று மேற்கு வங்கத்திலும் கலவரத்தை தூண்ட பாஜக முயற்சிக்கிறது. ஜே.பி. நட்டாவின் வாகனம் தாக்கப்படவில்லை. அவரையோ, அவரது வாகனத்தையோ தாக்க வேண்டும் என்ற எண்ணம் ஒருவருக்கும் இல்லை. பாதுகாப்பு வாகனம் தாக்கப்பட்டதாக கூறி மேற்கு வங்க அலுலவர்களை பணியிட மாற்றம் செய்து நம்மை அச்சுறுத்திவிடலாம் என மத்திய அரசு எண்ணுகிறது. அவ்வாறு அவர்கள் எண்ணுவது தவறு.
ஜே.பி.நட்டாவுடன் குற்றவாளிகள் ஏன் பயணிக்க வேண்டும். கடந்த ஆண்டு ஈஸ்வர் சந்திரா வித்யாசாகர் சிலையை சேதப்படுத்திய குற்றவாளிகள்தான், தற்போது ஜே.பி.நட்டாவுடன் பயணித்து, சுதந்திரமாக சுற்றி திரிந்து கொண்டிருக்கின்றனர். முடிந்தால் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தி பாருங்கள் என மத்திய அரசுக்கு நான் சவால் விடுக்கிறேன்" என்றார்.
தேசிய கீதத்தை மாற்ற வேண்டும் என்ற பாஜக எம்பியும், மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சுவாமியின் கோரிக்கை தொடர்பாக பேசிய அவர், "தேசிய கீதத்தை மாற்ற முயன்றால் மக்கள் அதற்கு தக்க பதிலடி கொடுப்பார்கள். நம் நாட்டின் வரலாற்றை மாற்ற வேண்டும் என பாஜக விரும்புகிறது. மக்களிடையே மதக்கலவரத்தை தூண்டி, வெறுப்புணர்வை பரப்பு எண்ணுகின்றனர்" என குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க: ஜே.பி.நட்டா வாகனம் மீது தாக்குதல் - மேற்கு வங்க ஐபிஎஸ் அலுவலர்கள் பணியிடமாற்றம்