டெல்லி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தில் ஜனவரி 22ஆம் தேதி புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி உட்படப் பல நாடுகளில் இருந்து பல்வேறு தலைவர்கள், மத்திய மாநில அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிலையில், ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜனவரி 22ஆம் தேதி அனைத்து மத்திய அரசு அலுவலகங்களும் அரை நாள் விடுமுறை என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் இன்று (ஜனவரி 18) தெரிவித்துள்ளார். இதன் படி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களும் ஜனவரி 22ஆம் தேதி மதியம் 2.30 மணி வரை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு அலுவலகங்கள் ஜனவரி 22ஆம் தேதி மதியம் 2.30 மணி வரை மூடப்படும் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "அயோத்தி ராம் கோயில் கும்பாபிஷேகத்தில் பல அரசு ஊழியர் கலந்து கொள்ள உள்ளனர்.
இதனால் இந்தியாவில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களும் மதியம் 2.30 மணி வரை மூடப்படும். மத்திய அரசு ஊழியர்களுக்கு அன்று அரை நாள் விடுமுறை" என கூறப்பட்டுள்ளது. ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்விற்காக சில மாநிலங்கள் ஜனவரி 22ஆம் தேதி விடுமுறை அறிவித்துள்ளது.
கோயில் திறப்பை முன்னிட்டு உத்தரபிரதேசம், கோவா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் விடுமுறை அறிவித்துள்ளது. அதே போல் அரியானா மாநிலத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் ஜனவரி 22ஆம் தேதி விடுமுறை அளிக்குமாறு இந்தியத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு இந்திய பார் கவுன்சில் சார்பாக கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா கடிதம் எழுதியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தில், "ஜனவரி 22ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வு மதம் மற்றும் கலாச்சாரத்தின் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. எனவே ஜனவரி 22ஆம் தேதி விடுமுறையாக அறிவிக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி, ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வை இந்திய மக்கள் தீபாவளி போல் கொண்டாட வேண்டும் எனவும் அனைவரும் வீட்டில் விளக்கு ஏற்றும் படியும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தோனி மீதான அவதூறு வழக்கு : ஜன. 29ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் விசாரணை!